வடமாநில வாலிபர்கள் குழந்தைகளைக் கடத்த வந்ததாக சந்தேகம் ஏற்பட்டால் பொதுமக்கள் காஞ்சிபுரத்திலுள்ள காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளமான வாட்ஸ் அப்பில் வட மாநிலங்களிலிருந்து சுமார் 200க்கும் மேற்பட்டோர் தமிழகத்தில் கோடைவிடுமுறையினை பயன்படுத்தி குழந்தைகளைக் கடந்த வந்துள்ளதாக தகவல் பரவி வருகிறது. இதனால் பிழைப்பு தேடி தமிழகம் வந்துள்ள வட மாநிலத்தினர் கடும் பீதியில் உள்ளனர். காஞ்சிபுரம் தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டம் என்பதால் இங்கு அதிகளவில் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், வாட்ஸ் அப்பில் பரவி வரும் தகவலால் பொதுமக்கள் அவர்களை தாக்கும் நிலை தற்போது உருவாகியுள்ளது. கடந்த சில நாட்களில் மாவட்டத்தில் பல பகுதிகளில் பொதுமக்களின் தாக்குதலில் வட மாநிலத்தவர்கள் பெரிதும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானி வெளியிட்டுள்ள அறிக்கையில், சந்தேகப்படும் நபர்களை கண்டால் உடனடியாக அருகிலுள்ள காவல் கோட்டத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். பொதுமக்கள் அவர்களை தாக்கவேண்டாம். இதனால் அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உருவாகுவதை தவிர்க்க வேண்டும் எனவும் தனது அறிக்கையில் தெரிவி்த்துள்ளார். மேலும் இது போன்ற செயல்களில் ஈடுபடும் பொதுமக்கள் மீது காவல்துறை சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.
காஞ்சிபுரத்தில் காலை முதல் ஆட்டோ மூலம் காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் துண்டு பிரசுரங்களையும் பொதுமக்களுக்கு வழங்கி வருகிறார்கள். இதில் புகார் தெரிவிக்க காஞ்சிபுரம் மாவட்ட கோட்ட காவல் அலுவலர்களின் மொபைல் எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
காஞ்சி காவல் கோட்டம் – 94981 00261
பெருமந்தூர் காவல் கோட்டம் – 94981 00262
செங்கல்பட்டு – 94981 00263
மதுராந்தகம் – 94981 00264
மாமல்லபுரம் – 94981 00265
வண்டலூர் – 94981 00306
காஞ்சி காவல் கட்டுபாட்டு அறை – 044 – 27222000
தனிப்பிரிவு அலுவலகம் – 044 2723801