சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று இரவில் இருந்து கனமழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதன் காரணமாக சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் திடீர் கனமழைக்கான காரணம் என்ன என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
இந்த மழைக்கு காரணம் தெற்கு வங்கக்கடலில் உருவாகியிருக்கும் மேலடுக்கு சுழற்சி. தென்மேற்குப் பருவமழை என்பது சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களுக்கு கிடையாது. தமிழகத்தில் மேற்குத்தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில்தான் தென்மேற்குப் பருவமழை பொழியும்.
ஜூன் மாதம் தொடங்கியதிலிருந்து நேற்று முன்தினம் வரைக்கும் சென்னை உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்துதான் காணப்பட்டது. இந்நிலையில்தான் தெற்கு வங்கக் கடலில் ஒரு மேலடுக்கு சுழற்சி உருவானது. அங்கிருந்து வடகிழக்கு திசையை நோக்கி காற்று வீச ஆரம்பித்தது. இதன் காரணமாக மேலடுக்கு சுழற்சியில் இருந்த மழை மேகக்கூட்டம் நகர்ந்து கடலோர மாவட்டங்களுக்கு மழையை கொடுத்திருக்கிறது. தற்போது சென்னையில் பெய்துவரும் மழைக்கு இதுதான் காரணம்.
நேற்று இரவு தொடங்கிய மழை விடாமல் பெய்து கொண்டிருக்கிறது. தற்போது வரைக்கும் விட்டுவிட்டு மிதமான மழையாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. இன்னும் 2-3 மணிநேரத்துக்கு மழை நீடிக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை ஒருசில இடங்களில் மிதமான மழையாகவும், ஓரிரு இடங்களில் கனமழையாகவும் பெய்திருக்கிறது.
பல இடங்களில் மழையால் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.