தமிழகத்தில் தனியார் வாகனங்களில், அரசு வாகனங்களில் குறிப்பிடப்படும் 'G' என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளதாகவும், 'இந்திய அரசு', 'தமிழ்நாடு அரசு' எனக் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் கூறி, சென்னையைச் சேர்ந்த அரசு மருத்துவர் கிருத்திகா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், அரசு சின்னங்களை ஒட்டிக்கொண்டு அந்த வாகனங்கள் விதிமீறல்களில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இந்த வழக்கு, தலைமை நீதபதி சஞ்சய் கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தனியார் வாகனங்களில் விதிகளை மீறி ஒட்டப்பட்டுள்ள ஸ்டிக்கர்களை அகற்ற அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரப்பட்டது. ஆனால், “விதிமீறல்களுக்கு எதிராக வட்டார போக்குவரத்து அதிகாரி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுதான் கோர முடியும்” என தலைமை நீதிபதி சுட்டிக்காட்டியதை அடுத்து, மனுவில் கோரிக்கையை திருத்தி தாக்கல் செய்வதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்றம் விரிவான உத்தரவு பிறப்பித்துள்ளதாக நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. இதுபோன்ற விதி மீறல்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அரசுத்தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை செப்டம்பர் 20 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.