வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் சூழலில், ராமநாதபுரம் மாவட்டம், பாம்பனில் கொட்டித்தீர்த்துள்ள கனமழை அங்கிருப்பவர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. கடலோர பகுதிகளான பாம்பன், மண்டபம், தங்கச்சிமடம், ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளி்ல் நேற்றைய தினம் கனமழை கொட்டித் தீர்த்தது.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், “ராமேஸ்வரத்தில் 3 மணி நேரத்தில் 362 மில்லி மீட்டர் மழை கொட்டித்தீர்த்துள்ளது. ராமேஸ்வரத்தில் இப்படி ஒரு மழையை பார்த்ததில்லை. இதனை மேக வெடிப்பு என்று கூற முடியாது. சூப்பர் மேக வெடிப்பு என்றே அழைக்கலாம்” என்று குறிப்பிட்டுள்ளார். ஆம், மேகவெடிப்பு காரணமாகவே ஒரே நாளில் ஸ்தம்பித்து நிற்கிறது பாம்பன்.
“மேக வெடிப்பு என்றால் என்ன என்று பார்த்தால், ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒரு மணி நேரத்திற்குள்ளாக 10 செண்டிமீட்டர் மழை பெய்தால், அது மேகவெடிப்பு என்று அழைக்கப்படுகிறது. பெரும்பாலும் மலைப்பாங்கான பிரதேசங்களில்தான் மேகவெடிப்புகள் நிகழ்கின்றன. குறிப்பாக பருவமழைக் காலங்களில், கனமான மழைத் துளிகளோடு தவிழ்ந்துவரும் மேகத்தில் இருந்து தண்ணீர் துளிகள் விழுந்துவிடாமல், தரையிலிருந்து மேல் எழும்பும் வெப்ப காற்று தடுத்து நிறுத்துகிறது. கிட்டத்தட்ட மேகத்திலிருந்து வெளியே வந்துவிட்ட துளிகளை மீண்டும் மேகத்திற்குள்ளேயே அனுப்பும் நிகழ்வாக இருக்கிறது.
இப்படி கனமான மழைத் துளிகளை மேகத்திற்கு அனுப்பும் வெப்பக்காற்றின் அழுத்தமே, ஒரே நேரத்தில் மொத்தமாக மழையை கொட்டச் செய்துவிடுகிறது. இதனால் துளித் துளியாய் இல்லாமல், அருவி போல மழைநீர் கொட்டுவதால் அதன் வீரியமும் வேகமும் மிக அதிகமாக இருக்கும். இத்தோடு காற்றின் வேகம், புயல் போன்ற சூழல் ஏற்பட்டால் அது பெரும் விளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றன.
இப்படி, நேற்றைய தினம் இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் காற்று சுழற்சி நிலவி வந்துள்ளது. இதனால் இரு வேறு காற்று குவிதல்கள் பாம்பன் பகுதியில் ஏற்பட்டுள்ளது. ஈரப்பதம் மிகுந்த கிழக்கு திசை காற்றும், வறண்ட வடக்கு திசை காற்றும் ராமேஸ்வரத்தில் நிலவி வந்துள்ளன. இதனால், அந்த இடத்தில் குறுகிய நேரத்தில் அடர் மேகங்கள் ஒரே இடத்தில் குவிந்து அதீத மழை பொழிவை கொடுத்துள்ளது” என்கிறார் தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன்.
மேலும், இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல், குமரி கடல் பகுதியில் காற்றுச் சுழற்றி நிலவி வருவதால், தென் கடலோர மாவட்டங்களில் மழை தொடரும் என்கிறார் அவர்.