குலசேகரப்பட்டினம் என்றவுடன் எல்லோரது மனதிலும் நினைவுக்கு வருவது தசரா பண்டிகைதான். நாடு முழுவதும் பல இடங்களில் தசரா கொண்டாடப்பட்டாலும், மைசூருக்கு அடுத்தபடியாக மிக பிரமாண்டமாக குலசேகரப்பட்டினத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. கலாச்சாரமும் பண்பாடும் மிகுந்த குலசேகரப்பட்டினம், இனிமேல் அறிவியலும் தொழில்நுட்பமும் கலந்த ஒரு நகரமாக மாறப்போகிறது.
ஏல்லோரும் மிகவும் ஆவலோடு எதிர்பார்த்த இரண்டாவது ஏவுதளம் அமைக்க ரூ.6.24 கோடி மதிப்பில் சுற்றச்சுவர் மற்றும் எஸ்எஸ்எல்வி ஏவுதளம் அமைக்க இஸ்ரோ, ஒப்பந்தப்புள்ளி கோரியிருக்கிறது. மொத்தமாக 2376 ஏக்கர் பரப்பளவில் இந்த ஏவுதளம் அமைய இருக்கிறது. இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி 99 சதவீதம் முழுமையாக முடிவடைந்திருக்கிறது.
குலசேகரப்பட்டினத்தில் இரண்டாவது ஏவுதளம் இஸ்ரோவுக்கு ஏன் அவசியம்?
இஸ்ரோ, கடந்த 5 வருடங்களாக பல நாடுகளுடைய செயற்கை கோள்களை விண்ணில் ஏவியிருக்கும் நிலையில், ஸ்ரீஹரி கோட்டாவில் போதுமான வசதியில்லாததாலும், அங்கிருந்து தொடர்ச்சியாக ராக்கெட்களை அனுப்புவது மிகவும் சிரமமாக இருப்பதாலும் குலசேகரப்பட்டினத்தை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இதற்கு காரணம், குலசேகரப்பட்டினம் பூமத்திய ரேகைக்கு மிக அருகில் இருக்கிறது.
ஒரு ராக்கெட்டை விண்ணில் ஏவ வேண்டுமென்றால், அது கிழக்கு திசையில் மேலே சென்று செயற்கை கோள்களை நிலை நிறுத்துவதுதான் அதன் தொழில்நுட்ப வடிவமைப்பு. ஸ்ரீஹரி கோட்டாவை ஒப்பிடும்போது குலசேகரப்பட்டினத்தின் தொலைவு கிட்டத்தட்ட 800 கி.மீ அளவுக்கு குறைவு என சொல்லப்படுகிறது. இதையடுத்து இரண்டு வருட காலத்திற்குள் இரண்டாவது ஏவுதளம் கட்டி முடிக்கப்படும் என தெரியவருகிறது.
இந்த ஏவுதளம் அமைப்பதன் மூலமாக கிடைக்கும் நன்மைகள் என்ன?
தமிழ்நாட்டை சுற்றியுள்ள அனைத்து புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு பெரிய வாய்ப்பு கிடைக்கும். தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டே புதிய விண்வெளி கொள்கையை தீட்டி அதற்கான செல்பாடுகளில் ஈடுபட்டு வரும் நிலையில், பொருளாதாரத்தை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
குலசேகரப்பட்டினம் மட்டுமின்றி ராமேஸ்வரம், நாகப்பட்டினம் போன்ற பகுதிகளிலும் ராக்கெட் ஏவுதளங்கள் அமைக்க வாய்ப்பிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் போது வேலைவாய்ப்பு பெரும், வணிக ரீதியாக முன்னேற்றம் ஏற்படும். குறிப்பாக இந்த ஏவுதளம் மூலம் 10 ஆயிரம் இளைஞர்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்பதால் அது தென்மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் என்கின்றனர்.
மேலும், தூத்துக்குடி விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்கான நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், குலசேகரன் பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமையும்போது தூத்துக்குடி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, குலசேகரன்பட்டினத்தில் அமையவிருக்கும் ராக்கெட் ஏவுதளத்தால் ஏற்படும் பயன்கள் என்னென்ன என்பது குறித்து முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் புதிய தலைமுறைக்கு அளித்துள்ள பேட்டியில் விளக்கியுள்ளார்.