தமிழ்நாடு

வேகமெடுக்கும் கொரோனா - தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள கூடுதல் கட்டுப்பாடுகள் என்னென்ன?

வேகமெடுக்கும் கொரோனா - தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள கூடுதல் கட்டுப்பாடுகள் என்னென்ன?

கலிலுல்லா

தமிழகத்தில் ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள சிலவற்றிற்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக திருமணம் மற்றும் அதைச் சார்ந்த நிகழ்வுகளுக்கு அதிக பட்சம் 100 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உணவகங்கள், விடுதிகள் , அடுமனைகள், தங்கும் விடுதிகள் மற்றும் உறைவிடங்களில் 50விழுக்காடு வாடிக்கையாளர்கள் மட்டும் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படுவர் என்றும், பொழுதுபோக்கு மற்றும் கேளிக்கை பூங்காக்கள் 50 விழுக்காடு வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும் என்றும், முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகள் அதிகபட்சம் 100 நபர்களுடன் நடத்த அனுமதிக்கப்படும் என்றும் இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 50 நபர்களுக்கு மிகாமல் அனுமதிக்கப்படுவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

துணி மற்றும் நகைக்கடைகளில் ஒரே சமயத்தில் 50 விழுக்காடு வாடிக்கையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது கேளிக்கை விடுதிகளில் உள்ள உடற்பயிற்சி கூடங்கள், விளையாடுமிடங்கள், உணவகங்கள் போன்றவை ஒரே நேரத்தில் 50 விழுக்காடு வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும் என்றும் உடற்பயிற்சி மற்றும் யோகா பயிற்சி நிலையங்கள் 50 விழுக்காடு வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுப்போக்குவரத்து பேருந்துகளில் உள்ள இருக்கைகளுக்கு மிகாமல் பயணிகள் பயணிக்க அனுமதிக்கப்படுவர் என்றும், மெட்ரோ ரயிலில் 50 விழுக்காடு பயணிகள் மட்டுமே அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படுவர் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகள் உள்ளிட்ட அனைத்து அரங்குகளும் 50 விழுக்காடு பார்வையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திறந்த வெளி விளையாட்டு அரங்குகளில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பயன்படுத்தி விளையாட்டுப் போட்டிகள் நடத்த அனுமதிக்கப்படும் என்றும் உள்விளையாட்டு அரங்குகளில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி 50 விழுக்காடு பார்வையாளர்களுடன் போட்டிகள் நடத்த அனுமதிக்கப்படும் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அழகு நிலையங்கள், சலூன்கள் உள்ளிட்டவைகள் 50 விழுக்காடு வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும் என்றும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.