தமிழ்நாடு

தீங்கிழைக்கும் எந்தத் திட்டத்தையும் அரசு அனுமதிக்காது - ஓபிஎஸ்

தீங்கிழைக்கும் எந்தத் திட்டத்தையும் அரசு அனுமதிக்காது - ஓபிஎஸ்

webteam

தமிழக மக்களுக்கு விரோதமான, தீங்கிழைக்கும் எந்தத் திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்காது என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்

நாடு முழுவதும் 55 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க திட்டமிடப்பட்டு அதற்கான நிறுவனங்களையும் மத்திய அரசு தேர்வு செய்தது. மொத்தமுள்ள 55 இடங்களில் 41 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க வேதாந்தா நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சிதம்பரம் மற்றும் டெல்டா பகுதியில் 2 இடங்களிலும் ஹைட்ரோகார்பன் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. 

இதற்கான கையெழுத்து ஒப்பந்தம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கலந்து கொண்டு வேதாந்த நிறுவன தலைவர் அனில் அகர்வாலிடம் ஒப்பந்தத்தை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அனில் அகர்வால் '' மிக விரைவில் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது" என்று தெரிவித்தார். ஒப்பந்தம் குறித்து பேசிய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ''காவிரி படுகையின் 2 இடங்களில் தான் வேதாந்தா நிறுவனம் ஹைட்ரோகார்பன் எடுக்க உள்ளது. அதனால் தமிழகத்தில் பிரச்னை வர வாய்ப்பில்லை" என்று தெரிவித்தார்.

வேதாந்தா நிறுவனத்திற்கு அளிக்கப்பட்ட ஒப்பந்தம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ''வேதாந்தா நிறுவனம் எந்த ரூபத்திலும் தமிழகத்தில் கால்பதிக்க முடியாது. வேதாந்தா நிறுவனம் ஆளுமை செலுத்த முயற்சிப்பதை தமிழக அரசு நிச்சயம் தடுக்கும். தமிழக மக்களுக்கு விரோதமான, தீங்கிழைக்கும் எந்தத் திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்காது'' தெரிவித்துள்ளார்.