தமிழ்நாடு

நூறு ஆண்டுகளில் செய்ய வேண்டிய பணிகளை பத்தே ஆண்டுகளில் செய்துள்ளோம் - ஓபிஎஸ்

நூறு ஆண்டுகளில் செய்ய வேண்டிய பணிகளை பத்தே ஆண்டுகளில் செய்துள்ளோம் - ஓபிஎஸ்

kaleelrahman

100 ஆண்டுகளில் செய்யவேண்டிய மக்கள் பணிகளை இந்த அரசு பத்தாண்டுகளில் செய்து முடித்திருக்கிறது என தமிழக துணை முதல்வர் தேனியில் நடந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசினார்.

தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள 508 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா, திருமண நிதி உதவித் திட்டம், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் உள்ளிட்ட ரூ. 2.68 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தேனியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பயனாளிகளுக்கு வழங்கினார். பின்னர், தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது....

கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் 116 கல்லூரிகள் துவங்கப்பட்டுள்ளன. இதில் கலை அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், கால்நடை மருத்துவம் உள்ளிட்ட கல்லூரிகள் அடங்கும். சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகளில் தமிழகத்தை திமுக காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆட்சி செய்திருக்கின்றன. ஆனால், கடந்த பத்தாண்டு கால பொற்கால ஆட்சியில்தான் நூறு ஆண்டுகளில் செய்ய வேண்டிய நலத்திட்ட பணிகளை பத்தாண்டுகளில் செய்து முடித்த சாதனை நிகழ்த்தப்பட்டிருக்கிறது.

உணவு உற்பத்தியில் மத்திய அரசு வழங்கும் விருதை நாம் தொடர்ந்து பெற்றுக் கொண்டிருக்கிறோம். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் நோக்கில் தொழிற்சாலைகள் துவக்குவதில் தமிழக முதல்வர் முனைப்புக் காட்டி வருகிறார். தற்போது கூட உலக முதலீட்டாளர்களுடன் தொழிற்சாலைகள் துவங்க 28,000 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறது.


தேனி மாவட்டத்தில் சிட்கோ நிறுவனம் இம்மாதம் 28-ஆம் தேதி துவக்கப்படும். இதன் மூலம் பல நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் உருவாக வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இதன்மூலம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். இதுதான் ஒரு நல்ல அரசு செய்ய வேண்டிய சேவை. இதைத்தான் மாண்புமிகு அம்மாவின் அரசு செய்து கொண்டிருக்கிறது"என்று பேசினார்.