குற்றாலத்தின் மெயின் அருவியில் தண்ணீர் வரத்து துவங்கியதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்கள் சீசன் காலங்களாகும். இந்த நாட்களில் தென்மேற்கு பருவமழை மழையால் நீர் வரத்து அதிகரிக்கும். தற்போது கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், கடந்த இரண்டு நாட்களாக மழை சாரல் தென்காசி குற்றாலம் சுற்றுப்புற பகுதிகளில் பெய்து வந்தது.
இந்நிலையில் இன்று காலை முதல் ஐந்தருவியில் தண்ணீர் விழ ஆரம்பித்தது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனாலும் மெயின் அருவியில் 2 நாட்களாக தண்ணீரை எதிர்பார்த்து காத்திருந்தினர். இன்று மாலை குற்றாலம் மெயினருவியிலும் தண்ணீர் விழ துவங்கியதால் சீசன் கலைகட்டியது. எப்போதும் ஜூன் முதல் வாரத்தில் துவங்கும் சீசன், இந்த முறை தாமதமாக துவங்கியுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தண்ணீர் விழுவதால் அருவியில் குளிப்பதற்கு சிறிது நேரம் காவல் துறையினர் அனுமதிக்க வில்லை. பின்னர் அனுமதி வழங்கப்பட்டது.