விருதுநகரில் நீண்ட நாட்களாக மிளகாய் செடிகளை திருடியவரை கையும், களவுமாக விவசாயி பிடித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே மிளகாய் செடிகளை பயிரிட்டு வந்தவர் விவசாயி பாண்டி. தன்னிடம் இருக்கும் பணத்தைக் கொண்டு பிழைப்புக்காக விவசாயம் பார்த்து வந்த அவரது தோட்டத்தில், நீண்ட நாட்களாக மிளகாய் செடிகளை யாரோ பறித்து சென்றுள்ளனர். யார் தான் இந்த மிளகாய் செடிகள் பறிப்பது? என்று குழப்பமடைந்த வருந்திய பாண்டி, ஒருநாள் அந்த திருடனை பிடித்தே ஆக வேண்டும் என முடிவு செய்துள்ளார்.
ஒரு நாள் தனது மனைவியை துணைக்கு அழைத்துக்கொண்டு யாரும் பார்க்க முடியாத வகையில் தோட்டத்தில் பதுங்கியிருந்துள்ளார் பாண்டி. அவரது போட்ட திட்டப்படியே, தோட்டத்தில் யாரும் இல்லை என நினைத்துக்கொண்டு நுழைந்துள்ளார் அந்தத் திருடன். மறைந்திருந்த விவசாயி பாண்டி, அந்த நபர் என்ன செய்கிறார் ? என்பதை பொறுத்திருந்து பார்த்துள்ளார். அப்போது வேக வேகமாக அந்த நபர் மிளகாய்ச் செடிகளை பறித்து எடுக்க, பதுங்கிய படியே போன பாண்டி கையும், களவுமாக பிடித்துள்ளார். பின்னர் தனது தோட்டத்தில் நீண்ட நாட்கள் கைவரிசையை காட்டிய அந்தத் திருடனை, போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளார். போலீஸார் நடத்திய விசாரணையில் அவர் அருப்புக்கோட்டை அருகே உள்ள கணேசன் என்பது தெரியவந்துள்ளது.