தமிழ்நாடு

அதிகரிக்கும் சாலை விதிமீறல்கள்: அபராதம் வசூலிக்க முடியாமல் தவிக்கும் காவல்துறை

அதிகரிக்கும் சாலை விதிமீறல்கள்: அபராதம் வசூலிக்க முடியாமல் தவிக்கும் காவல்துறை

Rasus

சாலை விதிமீறலில் ஈடுபடுவோரை கண்டறிய நவீன தொழில்நுட்பக் கருவிகள் கொண்டு வரப்பட்டலும், அபராதம் விதிக்க முடியாமல் காவல்துறையினர் திணறி வருகின்றனர்.

சென்னையில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவோரிடம் ஸ்பாட் ஃபைன் என்ற முறையில் அபராதம் வசூலிக்கப்பட்டு வந்தது. அதில் காவல்துறையினர் லஞ்சம் வாங்குவதைத் தடுக்க, பணமில்லா பரிவர்த்தனை முறையை கொண்டு வந்தது, சென்னை போக்குவரத்துக் காவல்துறை.

அடுத்தகட்டமாக, ஏஎன்பிஆர் என்ற நவீன கேமரா மூலம் விதி மீறுபவர்களை படம் எடுத்து, தானாக வழக்குப்பதிவு செய்து அபராதம் வசூலிக்கும் முறையும் செயல்படுத்தப்பட்டிருக்கிறது. அபராதம் விதிப்பதற்கு பல தொழில்நுட்ப வசதிகள் கொண்டு வரப்பட்டாலும், அபராதத் தொகையை வசூலிப்பதில் போக்குவரத்து காவலர்களுக்கு சிக்கல் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. 78 விதமாக விதி மீறல்களைக் கண்டறியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ஏஎன்பிஆர் கேமரா மூலம், நாள் ஒன்றுக்கு சுமார் 50 ஆயிரம் பேர் விதிமீறலில் ஈடுபடுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதில் முக்கிய விதி மீறல்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டு வழக்குப் பதிவு செய்தால் கூட, மாதத்திற்கு லட்சக்கணக்கில் வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டியிருக்கும். நாள் ஒன்றுக்கு 10 ஆயிரத்திற்கு மேற்பட்டோரிடம் அபராதம் வசூலிக்க முடிவு செய்தாலும், 500 பேருக்கு மட்டுமே ரசீது அனுப்ப முடிவதாக போக்குவரத்து காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. லட்சக்கணக்கில் பதிவு செய்யப்படும் வழக்குகளுக்கு அபராதம் வசூலிப்பதற்கு, சென்னை காவல்துறையில் போதிய காவலர்கள் இல்லை என்றும் கூறப்படுகிறது.

விதி மீறல்களைக் கண்டறிய தொழில்நுட்ப வசதிகள் செய்து தரப்பட்டிருந்தாலும், சட்டத்தை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்க முடியவில்லை என்றால், விதிமீறல்களை கட்டுப்படுத்த முடியாது என்கிறார்கள், காவல்துறையினர். புதிதாக அமல்படுத்தப்பட்டுள்ள மோட்டார் வாகன சட்டத்திருத்தத்தின்படி, அபராதம் வசூலிப்பதில் மேலும் சிக்கலை ஏற்படுத்தும் என்பதே காவல்துறையினரின் குமுறல்.