பழனி முருகன் கோயிலில் விதிமீறி மூலவர் தரிசனத்தை புகைப்படம் எடுத்து வெளியிட்ட பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் உள்ளிட்டோர் மீது கோயில் நிர்வாகம் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலால் பழனி முருகன் கோயிலுக்கு செல்லும் மின் இழுவை ரயில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், வேல் யாத்திரைக்காக கடந்த 23ஆம் தேதி பழனிக்கு வந்த மத்திய இணையமைச்சர் முரளிதரன், பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன், துணைத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் மின் இழுவை ரயில் மூலம் கோவிலுக்கு சென்றுள்ளனர்.
பொதுமக்கள் தரிசனத்திற்கு மின் இழுவை ரயிலை அனுமதிக்காத கோயில் நிர்வாகம், பாஜக-வினரை பயணம் செய்ய அனுமதித்தது விதிமீறல் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் குற்றம்சாட்டி வந்தனர். இதனிடையே, முருகனின் மூன்றாம் படை வீடான பழனி திருஆவினன்குடி கோயிலில், மூலவரை எல்.முருகன் தரிசனம் செய்வது போன்ற புகைப்படம் தமிழக பாஜக-வின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியானது.
ஆகம விதிப்படி மூலவரை புகைப்படம் எடுப்பது தவறு என்பதால், புகைப்படம் எடுத்தவர்கள் மீது கோயில் நிர்வாகம் சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தங்கள் புகார் மீது அறநிலையத்துறை ஆணையர் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், முதலமைச்சரின் தனிப் பிரிவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து பழனி கோயில் நிர்வாகத்திடம் கேட்டபோது, கோரிக்கையை ஏற்று பேஸ்புக் பக்கத்திலிருந்து மூலவரின் புகைப்படம் நீக்கப்பட்டதால், புகார் மீது எந்த அழுத்தமும் கொடுக்கப்படவில்லை என தெரிவித்தனர்.