சென்னை நந்தம்பாக்கத்தில் உலக முதலீட்டாளர் மாநாடு இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது. பல நாடுகளைச் சேர்ந்த முன்னணி நிறுவனங்களின் தலைவர்கள் இதில் கலந்து கொள்கின்றனர். இம்மாநாட்டில் பல்வேறு அமர்வுகளில் தமிழ்நாட்டில் புதிதாக தொழில் தொடங்குவது, முதலீடு செய்தல், தொழில் செயல்பாடுகளை விரிவுபடுத்தல் தொடர்பாக பல்வேறு நிறுவனங்களுடன் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
இந்த மாநாட்டில் Village Cooking Channel குழுவினரும் கலந்து கொண்டனர். அவர்கள் கூறியதாவது, “எல்லோரிடமும் இணையம் உள்ளது. அனைவரும் எளிதாக கிரியேட்டர் ஆகலாம். அவர்கள் திறமையை வெளிப்படுத்தினால் அனைவரும் மேலே வரலாம்.
எங்களது வீடியோக்களில் நாங்கள் என்னமாதிரியான நடைமுறைகளை பின்பற்றுகிறோம், எப்படி தரமான வீடியோக்களை கொடுக்கின்றோம் போன்ற விஷயங்களைப் பகிர்ந்துகொண்டோம். cookd என்ற சேனல் அவர்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்கள்.
யூடியூப் சேனல்களை தொடங்குவது எப்படி என்று தமிழக அரசு நிகழ்வு மாதிரி ஒன்றை நடத்தினார்கள். அதை பெரிதாக நடத்த வேண்டும். அப்படி நடத்தினால் வேலை வாய்ப்பில்லாத இளைஞர்களுக்கு அது வருமானத்தை பெருக்கும் வாய்ப்பாக அமையும். மக்களுக்கு சோசியல் மீடியா பற்றிய விழிப்புணர்வை அவர்கள் கொண்டு சென்றால் நன்றாக இருக்கும்” என தெரிவித்தனர்.