4 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்களுக்கு தேமுதிக சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் நேரில் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள டிபிஐ வளாகத்திற்கு நேரில் வந்த விஜய பிரபாகரன் ஆசிரியர்களுக்கு ஆதரவு தெரிவித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஆசிரியர்களுக்கு ஆதரவு தர வந்துள்ளோம். ஆசிரியர்கள் நாட்டிற்கு மிகவும் முக்கியமானவர்கள். அவர்கள் பெரிதாக ஒன்றும் கேட்டுவிடவில்லை. அனைவருக்கும் ஒரே ஊதியம் என்பதை தான் கேட்கிறார்கள். அவர்கள் கடந்த 2009ஆம் ஆண்டு முதல் போராடினாலும், வரும் ஆண்டு முதல் ஊதியத்தை மாற்றிக்கொடுத்தால் போதும் என்கிறார்கள். அரசு அதை பரிசீலிக்க வேண்டும்.
ஆசிரியர்கள் இங்கு போராடும் போது, நாம் புது வருடம் கொண்டாடுவது தவறு. எனவே புத்தாண்டிற்குள் அவர்கள் கேட்பதை கொடுக்க வேண்டும். சென்னையிலிருந்து சேலத்திற்கு அமைக்கப்படும் சாலைக்காக ஒரு மரத்திற்கு ரூ.40 ஆயிரம் கொடுக்கும் போது, இவர்கள் கேட்பதைக் கொடுப்பதில் என்ன தவறு? என்பதை ஆசிரியர்கள் சார்பில் கேட்கிறேன். திமுக, அதிமுக என இரண்டு கட்சிகள் தொடர்ந்து ஆட்சிக்கு வந்திருக்கின்றன. ஆனால் இதே பிரச்னை தான் தொடர்கிறது. உழைப்பதற்கே ஆசிரியர்கள் ஊதியம் கேட்கின்றனர்.
ஒரு ரத்தத்தை பரிசோதிப்பது என்பது அடிப்படையானது. அதைக்கூட சோதிக்காத நிலையை காணும் போது, அரசு எந்த நிலையில் இருக்கிறது என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும். ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும். விஜயகாந்த் நலமுடன் இருக்கிறார். தேர்தல் கூட்டணி முடிவுகளை விஜயகாந்த் தான் அறிவிப்பார். விஜயகாந்த் கம்பீரக்குரலுடன் வருவார். பரப்புரை மேற்கொள்வார். நாடாளுமன்ற தேர்தல் மூலம் தமிழகத்தில் மாற்றம் வரும்” என்று தெரிவித்தார்.