நடிகரும், தேமுதிக நிறுவன தலைவருமான விஜயகாந்த் கடந்த நவம்பர் மாதம் 18ம் தேதி உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் குணமடைந்து வீடு திரும்ப வேண்டி தேமுதிகவினர் தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டு வந்தனர். அரசியல் கட்சித்தலைவர்கள் மற்றும் நடிகர்கள் என்று பலரும் விஜயகாந்த் உடல்நலம் தேறி வரவேண்டும் என்று வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில், உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்ட அவர், பூரண குணமடைந்து நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
தொடர்ந்து வீட்டுக்கும் சென்றதாக மருத்துவமனை மற்றும் தேமுதிக அறிக்கை வெளியிட்டது. இந்த செய்தி, தேமுதிகவினர் மற்றும் ரசிகர்களின் காதில் தேனை ஊற்றிய செய்தியாக அமைந்தது.
இந்நிலையில், கள்ளக்குறிச்சி அடுத்த பிரசித்தி பெற்ற ஆதிதிருவரங்க திருக்கோவிலில் தேமுதிக துணை செயலாளர் டி.கே.கோவிந்தன் உட்பட கட்சியினர் மொட்டை அடித்து முடி காணிக்கை செலுத்தி வேண்டுதலை நிறைவேற்றினார். விஜயகாந்த் பெயரில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபாட்டில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.