ஜெயலலிதா வீடியோவை வெளியிட்ட வெற்றிவேல் மீதான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீன் அளித்துள்ளது.
ஆர்.கே.நகரில் தேர்தல் வாக்குப் பதிவுக்கு முதல் நாளில் ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான வீடியோவை வெற்றிவேல் வெளியிட்டார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஒருநபர் விசாரணை ஆணையம் விசாரித்து வரும் நிலையில், அதன்வசம் வீடியோவை அளிக்காமல் பொதுவெளியில் வெளியிட்டதாக ஆணையத்தின் சார்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் வெற்றிவேல் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வெற்றிவேல் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை இன்று விசாரித்த நீதிமன்றம், வெற்றிவேலுக்கு முன் ஜாமீன் வழங்கியதுடன், தினமும் காலை 10.30 மணிக்கு அண்ணா சதுக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திடவும் நிபந்தனை விதித்திருக்கிறது.