தமிழ்நாடு

நடித்துக் கொண்டிருந்த போதே உயிரிழந்த தெருக்கூத்துக் கலைஞர்.. வேலூரில் நிகழ்ந்த சோகம்!

நடித்துக் கொண்டிருந்த போதே உயிரிழந்த தெருக்கூத்துக் கலைஞர்.. வேலூரில் நிகழ்ந்த சோகம்!

webteam

நடிப்பை, நாடகக்கலையை பெரிதும் நேசிப்பவர்கள் பலரின் விருப்பம், தங்களின் இறுதி நொடிவரை நடித்துக் கொண்டிருக்கவேண்டும் என்பதாக இருக்கும். அப்படி விருப்பப்பட்டுக் கொண்டிருந்த தெருக்கூத்து கலைஞர் ஒருவர் நடித்துக் கொண்டிருக்கும் போதே உயிரிழந்த சோக சம்பவம் வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே நடந்துள்ளது.

வேலூர் மேல் அரசம்பட்டு கிராமத்தை சேர்ந்த 52 வயது ஆசிரியரான கமலநாதன், சிறுவயது முதலே தெருக்கூத்து கலையில் ஆர்வம் கொண்டவர். மேல் அரசம்பட்டு, மடிகம் கிராமத்தில் காளியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, 'அர்ஜூன தபசு' எனும் தெருகூத்து நடைபெற்றது. இதில் கமலநாதன் அர்ஜூனன் வேடம் அணிந்து ஆடிக்கொண்டிருந்தார். விடிய விடிய தெருக்கூத்து நடந்த நிலையில், அதிகாலை ஐந்தரை மணி அளவில், கமலநாதன் திடீரென சுருண்டு விழுந்தார். இதனை பார்த்த சக கலைஞர்கள் அவரை தூக்கி அருகில் இருந்த ஒடுகத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு கமலநாதனை பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பால் கமலநாதன் முன்கூட்டியே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

ஆசிரியராக இருந்தபோதும், தெருக்கூத்து கலையில் இருந்த ஆர்வத்தால், தெருக்கூத்துகளில் பங்கேற்று வந்த கமலநாதன், தனது வாழ்வின் கடைசி நொடிவரை நடித்தபடியே உயிரிழந்த சம்பவம் சக கலைஞர்களையும், ஊர்மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.