தமிழ்நாடு

தேவர் ஜெயந்தி: பொதுமக்களுக்கு இடையூறாக செல்ல முயன்ற 127 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

தேவர் ஜெயந்தி: பொதுமக்களுக்கு இடையூறாக செல்ல முயன்ற 127 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

நிவேதா ஜெகராஜா

மதுரையில் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பொதுமக்களுக்கு இடையூறாகவும் அனுமதியின்றி செல்ல முயன்ற 127 இருசக்கர வாகனங்கள், 2 கார்கள், ஒரு ஆட்டோவை காவல்துறையினர் பறிமுதல் செய்து உள்ளனர்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 114 வது ஜெயந்தி மற்றும் 59 குருபூஜை விழாவை முன்னிட்டு, மதுரை மாவட்டத்திலிருந்து ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னுக்கு செல்பவர்கள், மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற்ற வாகனங்களில் மட்டுமே செல்ல வேண்டும் என மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்த நிலையில் நேற்று உரிய அனுமதி இல்லாமலும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாக வாகனங்களை ஓட்டியது, அதிகமான ஆட்களை ஏற்றி ஆபத்தான முறையில் பயணித்தது உள்ளிட்ட காரணங்களுக்காக மதுரை மாநகர காவல்துறையினர் 112 இருசக்கர வாகனங்கள், 2 கார்களை பறிமுதல் செய்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது அந்தந்த காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் மதுரை மாவட்டத்தில் 12 இருசக்கர வாகனங்கள் , ஒரு ஆட்டோவை மதுரை மாவட்ட காவல்துறையினர் பறிமுதல் செய்து சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மதுரை கோரிப்பாளையம் அருகே அரசுப் பேருந்து கண்ணாடியை உடைத்த மர்ம நபர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் குற்றவாளிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.