தமிழ்நாடு

நெல்லை: ஸ்மார்ட் சிட்டி திட்ட செயலாக்கத்தின்போது உருவான வாகன காப்பக சிக்கல்... மக்கள் அவதி

நெல்லை: ஸ்மார்ட் சிட்டி திட்ட செயலாக்கத்தின்போது உருவான வாகன காப்பக சிக்கல்... மக்கள் அவதி

நிவேதா ஜெகராஜா

நெல்லை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்ட அமலாக்கத்தில் பேருந்து நிலையங்கள் மற்றும் வாகன காப்பகங்கள் இடித்து கட்டப்பட்டு வருகிறது. இதனால் பாதுகாப்பற்ற முறையில் பொது வெளியில் வாகனங்களை நிறுத்தும் சூழலில் சிக்கி தவிப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்ரனர். மேலும் தற்காலிக மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என கோரிக்கையும் வைக்கின்றனர்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நெல்லை மாநகராட்சியில் ரூபாய் 1000 கோடி செலவில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக நெல்லை சந்திப்பில் உள்ள பெரியார் பேருந்து நிலையம், மற்றும் பாளையங்கோட்டை பேருந்து நிலையம் மற்றும் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம் ஆகிய 3  பேருந்து நிலையங்களும் எழில் மிகு நகர திட்டத்தின் கீழ் விரிவாக்கம் செய்யப்பட்டு புதிய கட்டிடங்கள் கட்டும் பணி கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

இந்த பேருந்து நிலையங்களில் திருநெல்வேலியிலிருந்து தூத்துக்குடி, நாகர்கோவில், மதுரை, சென்னை போன்ற வெளி மாவட்டங்களுக்கு செல்வதற்கான பேருந்து சேவைக்காக செயல்படுவது, எம்ஜிஆர் பேருந்து நிலையம்தான். இந்த பேருந்து நிலையத்தின் வாசலுக்கு அருகில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கான காப்பகம் செயல்படுகிறது.

தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இந்த வாகன காப்பகம் பல சுழல் அடுக்குகளுடன் கூடிய பிரம்மாண்ட வாகன நிறுத்தமாக உருவாக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தற்போது குறைந்தளவே பைக்குகள் வாகன காப்பகத்தில் நிறுத்த அனுமதிக்கின்றன. இதனால் திருநெல்வேலியிலிருந்து தூத்துக்குடி மற்றும் நாகர்கோவிலுக்கு வேலைக்காக செல்பவர்கள் பைக்குகளை தற்காலிக பேருந்து நிலையத்தின் எதிரே பொது வெளியில் நிறுத்தி செல்கிறார்கள். அங்கே எந்த பாதுகாப்பும் கிடையாது, வாகனங்கள் நிறுத்துவதற்கு அனுமதியும் கிடையாது. இதனால் வெளியூர் வேலைக்குச் செல்பவர்கள் மற்றும் வேலைக்குச் செல்பவர்களை பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டு வருபவர்களின் நிலை மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி இருப்பதாக கூறுகின்றனர் வாகன ஓட்டிகள்.

“பேருந்து நிலையத்திற்கு இருசக்கர வாகனங்களை எடுத்து வராமல் ஆட்டோவில் வந்து பின் வெளியூருக்கு செல்ல பஸ் பிடிக்க வேண்டியுள்ளது. மீண்டும் ஊர் திரும்பும்போது நள்ளிரவில் ஆட்டோவை அழைத்தால், பெட்ரோல் கட்டணம் அதிகரித்ததன் காரணமாக குறைந்த தூரத்திற்கு கூட அதிக கட்டணம் வசூலிக்கும் சூழல் இப்போது உள்ளது. இது எங்களை மிகவும் பாதித்துள்ளது” எனக்கூறும் அவர்கள், மாநகராட்சி நிர்வாகம் தங்களுக்கு தற்காலிக மாற்று ஏற்பாடுகளை வாகன நிறுத்தத்தில் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

- நாகராஜன் | ஒளிப்பதிவாளர் : நாராயணமூர்த்தி.