வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு வந்திருந்த ஆயிரக்கணக்கான வெளிநாட்டு பறவைகள், தங்கள் சொந்த நாட்டுக்கு திரும்புகின்றன.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள உலகப் பிரசித்தி பெற்ற வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் உள்ளது. இந்த சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தில் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, மியான்மர், பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட 16 நாடுகளில் இருந்து 26 வகையான பறவைகள் வரத் தொடங்கும்.
இவ்வாறு 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள், வேடந்தாங்கல் சரணாலயத்திற்கு வந்து தங்கி, இனப்பெருக்கம் செய்து மீண்டும் தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்பும்.
அந்த வகையில், இந்த ஆண்டும் அதிக மழை பெய்ததால் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவை வகைகள் இங்கு வந்து இனப்பெருக்கம் செய்தன. தற்போது சீசன் முடிவடைவதால் அந்தப் பறவைகள் அனைத்தும் சொந்த நாடு திரும்பி வருகின்றன.
தற்போது சரணாலயத்தில் நான்கு வகையான பறவைகளே உள்ளன. வர்ண நாரை, நத்தை கொத்தி நாரை, மிளிர் அரிவாள் மூக்கன், கூழைக்கடா ஆகிய பறவைகள் இருக்கின்றன. இதில் அதிகமாக நத்தை கொத்தி நாரை பறவைகள் உள்ளன. சரணாலயம் ஆண்டு முழுவதும் திறந்திருக்கும் என வனத்துறை தெரிவித்துள்ளது.