மத நம்பிக்கையுள்ளவர்கள் சிவபெருமானை நிராகரிக்கிறார்களா என கவிஞர் வைரமுத்து கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழாற்றுப்படை என்ற தலைப்பில் மறைமலையடிகள் குறித்த கட்டுரை அரங்கேற்ற நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய வைரமுத்து, “மகாசிவராத்திரியன்று இந்த நிகழ்ச்சியை நடத்தினால் கூட்டம் வராது என்று சொன்னார்களே? அனைவரும் கோயிலுக்குத்தான் செல்வர்கள் என்றார்களே? சிவராத்திரி நாளன்று கட்டுரை அரங்கேற்ற நிகழ்ச்சி நடந்த போதும், தமிழ்தான் தங்கள் குலதெய்வம் என திரளானோர் நிகழ்வுக்கு வந்துள்ளனர்” என்று வைரமுத்து கூறினார்.
மேலும் அவர் பேசுகையில், “சிவபெருமான் கையில் வைத்திருக்கும் உடுக்கையில் இருந்து தான் தமிழும், சமஸ்கிருதமும் பிறந்ததாக சொல்கிறார்கள். சிவபெருமானே தமிழையும், சமஸ்கிருதத்தை சமமாக பாவித்துள்ளார். இதை அறிந்திருந்தும் மொழிகளில் பாகுபாடுகள் காட்டுவது ஏன்? சிவபெருமானின் உடுக்கையில் பிறந்த இரு மொழிகளில் ஒன்று உயர்ந்தது, ஒன்று தாழ்ந்தது என்று கூறுவதன் மூலம் சிவபெருமானையே நிராகரிக்கிறார்களா?” என வினவினார்.