மார்கழி மாதம் ஏகாதசியையொட்டி தமிழ்நாட்டில் உள்ள வைணவ திருத்தலங்களில் பரமபத வாசல் திறக்கப்பட்டது.
பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படும் வைணவ திருத்தலங்களில் முதன்மையான திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி இன்று அதிகாலை 4.30 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்பட்டது. முன்னதாக, பகல்பத்து உற்சவம் கடந்த டிசம்பர் 27-ஆம் தேதி தொடங்கியது.
நாள்தோறும் நம்பெருமாள் ஒவ்வொரு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். பகல்பத்து உற்சவத்தின் பத்தாம் நாளான இன்று வைகுண்ட ஏகாதசியையொட்டி பரமபத வாசல் திறக்கப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் நம்பெருமாளுடன் பரமபத வாசல் வழியாகச் சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.
வைகுண்ட ஏகாதசியையொட்டி சுமார் 5 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதேபோல, சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலிலும் இன்று அதிகாலையில் பரமபத வாசல் திறக்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு கோவிந்தா கோவிந்தா என்று கோஷமிட்டவாறு சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல, தமிழ்நாட்டில் பல்வேறு வைணவ திருத்தலங்களிலும் வைகுண்ட ஏகாதசியையொட்டி அதிகாலை பரமபதவாசல் திறக்கப்பட்டது.