தமிழ்நாடு

காக்கையை தேசிய பறவையாக்க முடியுமா..? அண்ணாவை மேற்கோள் காட்டிய வைகைசெல்வன்..!

காக்கையை தேசிய பறவையாக்க முடியுமா..? அண்ணாவை மேற்கோள் காட்டிய வைகைசெல்வன்..!

Rasus

இந்தியாவை ஒருங்கிணைக்க இந்தி மொழியால் மட்டுமே முடியும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ள நிலையில், அண்ணா நாடாளுமன்றத்தில் பேசியதை குறிப்பிட்டு வைகைசெல்வன் கருத்து தெரிவித்துள்ளார்.

நாட்டின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இன்று இந்தி தினம் கொண்டாடப்படும் நிலையில் அமித்ஷா நாட்டு மக்களுக்கு வாழ்த்து மடலை வெளியிட்டுள்ளார். அதில் நாட்டின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்றும் ஒரே மொழியாக இந்தி இருந்தால் இந்தியாவை உலக அரங்கில் அடையாளப்படுத்த முடியும் எனவும் அவர் பதிவிட்டுள்ளார். இந்தியா ஒரே நாடு என்பதை வலியுறுத்தும் முயற்சிக்கான பணிகளை ஒருங்கிணைக்கும் ஒரே மொழி இந்திதான் எனவும் அமித்ஷா தமது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் அமித் ஷாவின் கருத்து குறித்து அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைசெல்வன் கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், “ மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தனது எண்ணத்தை இதில் பதிவு செய்திருக்கலாம். ஆனால் ஒரு கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில், பல்வேறு மாநிலங்கள், பல்வேறு மொழிகள், பல்வேறு இனங்கள் கொண்ட பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவின் கலாச்சாரத்தில், இதற்கு சாத்தியக்கூறு உண்டு என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அண்ணா நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது முன்னாள் பிரதமர் நேருவும் அவையில் அமர்ந்திருந்தார். அப்போது பேசிய அண்ணா, ‘ அதிகமான மக்கள் பேசுகிறார்கள் என்பதால் ஹிந்தி தான் இந்தியாவின் ஆட்சி மொழியாக இருக்க வேண்டுமா..? அப்படிப் பார்த்தால் இந்தியாவில் மயில்களை விட காக்கைகளின் எண்ணிக்கைதான் அதிகம். ஆனால் நாம் தேசிய பறவையாக மயிலை தான் கொண்டிருக்கிறோம் தவிர காக்கைகளை அல்ல என்ற வாதத்தை முன்வைத்து அனைவரின் ஆதரவையும் அண்ணா அப்போது பெற்றார்.

தமிழ் நீண்ட நெடிய பாரம்பரியம் கொண்ட மொழி என்பதை தற்போதைய பிரதமர் மோடி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார். தமிழ் மொழியின் மீது அன்பும், பாசமும் கொண்டிருப்பதாக அவர் பல்வேறு தருணங்களில் எடுத்துரைக்கிறார். எனவே தமிழ் மொழிக்கு எவ்விதமான இடையூறும் ஏற்படாது.” எனத் தெரிவித்துள்ளார்.