மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையின் செவிலியர் மற்றும் மருத்துவர்களின் அலட்சியத்தால் பிறந்த பச்சிளம் குழந்தையின் உடலில் 20 நாட்கள் ஊசி சிக்கி இருந்துள்ளது.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள எம்எஸ்ஆர் புரம் பகுதியில் வசித்து வருபவர் பிராபகரன் (28). இவரது மனைவி மலர்விழி (20). கர்ப்பிணியாக இருந்த மலர்விழிக்கு கடந்த மாதம் 20ஆம் தேதி, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த அடுத்த நாளான 21ஆம் தேதி தடுப்பூசி செலுத்த வேண்டும் என தெரிவித்தது, குழந்தையின் இடது கையில் ஒரு ஊசியும், இடது கால் தொடை பகுதியில் ஒரு ஊசியும் செலுத்தப்பட்டுள்ளது.
அன்று முதலே குழந்தை அழுது கொண்டிருந்த நிலையில் கடந்த மாதம் 31ம் தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ச் செய்யப்பட்டு தாயும், குழந்தையும் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். வீட்டிற்கு வந்த பின்னர் குழந்தை வலியால் துடித்தபடி இரவு, பகல் என விடாமல் அழுது கொண்டே இருந்துள்ளது. தடுப்பூசி செலுத்தப்பட்ட குழந்தையின் இடது கால் தொடை பகுதியும் வழக்கத்திற்கு மாறாக வீங்கி கொண்டே வந்துள்ளது. இதனால் வேதனையில் ஆழ்ந்த குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் செய்வதறியாது திகைத்தனர்.
குழந்தையை குளிக்க வைத்தால் சரியாகும் என நினைத்த குழந்தையின் பாட்டி, தண்ணீர் ஊற்றி நீவி விட்டபடி குழந்தையை குளிப்பாட்டியுள்ளார். அப்போது அவரது கையில் குழந்தையின் இடது தொடையில் இருந்து வெளி நீட்டிய மெல்லிய ஊசி குத்தியுள்ளது. இதனால் அதிர்ச்சியில் அடைந்த பெற்றோர் குழந்தையின் உடலை பார்த்த போது, செவிலியர் தடுப்பூசி போட்ட இடத்தில் ஊசி அகற்றபடாமல் இருந்தது தெரியவந்தது.
அரசு மருத்துவமனையில் நடைபெற்ற இந்த அலட்சிய போக்கால், பிறந்த பச்சிளம் குழந்தை கடந்த இருபது நாட்களாக வலியில் துடித்தபடி கொடுமையை அனுபவித்துள்ளது. தற்போது குழந்தையின் உடலில் சிக்கியிருந்த ஊசி அகற்றப்பட்டு அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையின் பிரசவ வார்டில் அலட்சியமாக செயல்பட்ட பணி மருத்துவர் மற்றும் ஊசி செலுத்திய செவிலியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என குழந்தையின் தாய் மலர்விழி மருத்துவமனை தலைமை மருத்துவரிடம் புகார் மனு அளித்துள்ளார். அரசு மருத்துவமனையில் பிறந்த பச்சிளம் குழந்தைக்கு நடைபெற்ற இச்சம்பவம் இப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.