நீலகிரி மாவட்டம் முதுமலை, தெப்பக்காடு யானைகள் முகாமில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கால்நடை மருத்துவர் பணியிடம் காலியாக உள்ளது. இதனால் வளர்ப்பு யானைகள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நோய்வாய் படும் வனவிலங்குகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் முதுமலை, தெப்பக்காடு யானைகள் முகாமில் 23 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த யானைகளை பராமரிக்க முதுமலைக்கு கால்நடை மருத்துவர் பணியிடம் உள்ளது. இந்த பணியிடத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வரை கால்நடை மருத்துவர் விஜயராகவன் பணியில் இருந்தார். அவர் பணியாற்றிய போது, முகாம் யானைகளை பராமரிப்பது, அவைகளுக்கு சிகிச்சை அளிப்பது, வனப்பகுதியில் இருந்து பிடித்து வரப்படும் காட்டு யானைகளை பராமரிப்பது என பல்வேறு பணிகளை மேற்கொண்டு வந்தார். அதை தவிர்த்து முதுமலை சுற்றுவட்டார பகுதிகளில் நோய்வாய்ப்படும் வனவிலங்குகளுக்கு சிகிச்சை அளிப்பது, இறந்த வனவிலங்குகளை பிரேதப் பரிசோதனை செய்வது என மருத்துவரின் பணி தொடர்ந்தது.
இந்த நிலையில் கால்நடை மருத்துவர் விஜராகவன் கடந்த மாதம் பணியிடம் மாறுதல் பெற்று திருப்பூர் சென்றார். அதன் பிறகு கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக முதுமலையில் கால்நடை மருத்துவர் பணியிடம் காலியாகவே இருந்து வருகிறது.
இதனால் வளர்ப்பு யானைகள் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நோய்வாய் படும் வனவிலங்குகளுக்கு சிகிச்சை அளிக்க கோவை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கால்நடை மருத்துவர்கள் அழைத்து வரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவைகளுக்கு சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்படுகின்றது. குறிப்பாக கூடலூரில் உடலில் காயங்களுடன் சுற்றித்திரியும் காட்டு யானைக்கு கால்நடை மருத்துவர் இல்லாததால் சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. ஏற்கனவே கூடலூரில் காலில் காயங்களுடன் சுற்றித்திரிந்த காட்டு யானைக்கு கால்நடை மருத்துவர் இல்லாத காரணத்தால், அதற்க்கு 8 நாட்கள் கழித்தே சிகிச்சை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. எதிர்காலத்தில் இதுபோன்ற முரண்பாடுகளை களைய முதுமலை பகுதிக்கு கால்நடை மருத்துவரை விரைந்து பணியமர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.