தமிழ்நாடு

அரியர் தேர்வு ரத்து செய்யப்பட்டதில் உடன்பாடு இல்லை - யுஜிசி

அரியர் தேர்வு ரத்து செய்யப்பட்டதில் உடன்பாடு இல்லை - யுஜிசி

webteam

அரியர் தேர்வு ரத்து செய்யப்பட்டதில் உடன்பாடு இல்லை என யுஜிசி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

அரியர் மாணவர்களையும் தேர்ச்சி என்ற அறிவிப்பை ரத்து செய்யக்கோரி முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, வழக்கறிஞர் ராம்குமார் தொடர்ந்த வழக்குகளில் பல்கலைக்கழக மானியக் குழு சார்பில், அதன் சார்பு செயலாளர் உமாகாந்த் பலுனி பதில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், இறுதி பருவத் தேர்வுகளை ஆன்லைன் அல்லது தனி மனித விலகல் உள்ளிட்ட கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் நேரடியாகவோதேர்வு நடத்த அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் உத்தரவிட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தது. இந்த தேர்வுகளை செப்டம்பர் 30ம் தேதிக்குள் நடத்தி முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், இறுதி பருவத் தேர்வுகள் நடத்த வேண்டியது அவசியமானது எனவும், தேர்வு நடத்த இயலாவிட்டால் கால அவகாசத்தை செப்டம்பர் 30ம் தேதிக்கு மேல் நீட்டிக்க கோரலாம் எனவும் தெரிவித்துள்ளதாக பதில் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்குகள் இன்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரியர் தேர்வு ரத்து செய்யப்பட்டதில் உடன்பாடு இல்லை என யுஜிசி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்தது.

இதைக்கேட்ட நீதிபதிகள், “இறுதி பருவத்தேர்வுகளை ஆன்லைனில் நடத்தும்போது அரியர் தேர்வுகளை ஏன் ஆன்லைனில் நடத்த முடியாது. யுஜிசியின் நிலைப்பாட்டை பதில் மனுவில் தெரிவிக்காதது ஏன்?” எனக் கேள்வி எழுப்பினர்.