Train Accident pt desk
தமிழ்நாடு

திருவிழாவுக்கு சென்றுவிட்டு தண்டவாளத்தில் படுத்த மூவர்... ரயில் மோதியதில் இருவர் பலி

திருத்துறைப்பூண்டி அருகே கோவில் திருவிழாவுக்கு சென்றுவிட்டு தண்டவாளத்தில் படுத்திருந்த மூவர் மீது ரயில் மோதியது. அந்த விபத்தில் இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

Kaleel Rahman

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உப்பூர் ஆலங்காடு பகுதியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்றிரவு நடைபெற்ற திருவிழாவை காண நாகை மாவட்டம் தெற்குபிடாகை மேலமருதூரைச் சேர்ந்த முகேஷ் என்ற முருக பாண்டியன் (22) உப்பூர் பகுதியைச் சேர்ந்த அருள் (24) மற்றும் கோபாலசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த பரத்குமார் (17) ஆகிய மூவரும் சென்றுள்ளனர்.

Two Death

திருவிழாவில் கலந்து கொண்ட பிறகு மூவரும் அருகே இருந்த தண்டவாளத்தில் படுத்திருந்துள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த தாம்பரம் - செங்கோட்டை விரைவு ரயில் அவர்கள் மீது மோதியுள்ளது. இதில், அருள் மற்றும் முருக பாண்டியன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பரத் என்பவர் படுகாயமடைந்தார்.

Ambulance

இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற திருவாரூர் ரயில்வே போலீசார், பரத்தை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து உயிரிழந்த இருவரின் சடலத்தையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த திருவாரூர் ரயில்வே போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது