தமிழ்நாடு

கரும்பு லாரியை சூழ்ந்த யானைக்கூட்டம்: மரத்தில் ஏறி உயிர் தப்பிய இருவர்..!

கரும்பு லாரியை சூழ்ந்த யானைக்கூட்டம்: மரத்தில் ஏறி உயிர் தப்பிய இருவர்..!

webteam

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே யானைக் கூட்டத்தில் இருந்து தப்பிப்பதற்காக, லாரி ஓட்டுநரும், அவரது உதவியாளரும் சாலையோர புளியமரத்தில் ஏறிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

சத்தியமங்கல புலிகள் காப்பக வனப்பகுதியில் வசிக்கும் யானைகள், தண்ணீர் மற்றும் தீவனம் தேடி அடிக்கடி ஊருக்குள் வருவது வழக்கம். இந்த யானைகள் தேசிய நெடுஞ்சாலைகளை கடந்து செல்வதும், அவை ‌கடந்து செல்லும் வரை வாகனங்கள் வரிசையாக நிற்பதும் வாடிக்கையான ஒன்றுதான். ஆனால், தமிழக- கர்நாடக எல்லை பகுதியான, காரப்பள்ளம் அருகே நடந்த‌ சம்பவமோ வேறு.

கர்நாடக மாநிலம் எலந்தூர் பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் மகேந்திரன், தனது உதவியாளர் விநாயக்-உடன் லாரியில் கரும்புகளை ஏற்றி சத்தியமங்கலம் நோக்கி வந்துள்ளார். காரப்பள்ளம் சோதனைச் சாவடி அருகே வந்து கொண்டிருந்தபோது, எதிரே யானைகள் வருவதை கண்டு லாரியை நிறுத்தியுள்ளார். கரும்புகள் வாசம் பிடித்து வந்த யானைக் கூட்டமோ, லாரியை சூழ்ந்தன. அதிலிருந்த கரும்புகளை யானைகள் ஒவ்வொன்றாக பிடுங்கின.

இதனால் அச்சமடைந்த லாரி ஓட்டுநரும், உதவியாளரும் லாரியின் மீது ஏறி அங்கிருந்த மரக்கிளைகளை பிடித்து மரத்தின் மேல் தஞ்சமடைந்தனர். இருவரும் செய்வதறியாது திகைத்தனர். எதைப்பற்றியும் கண்டு கொள்ளாத அந்த யானைக் கூட்டமோ, அதே மரத்தடியில் கரும்புகள் ஒவ்வொன்றையும் எடுத்து நிதானமாக சுவைத்துக்கொண்டிருந்தன. அரைமணி நேரத்திற்கு பிறகு, வயிறாற சாப்பிட்ட அந்த யானைக் கூட்டம் அங்கிருந்து கிளம்பியது. இதன் பின் போன உயிர் திரும்ப வந்தது என நிம்மதி பெருமூச்சுவிட்ட ஓட்டுநரும், உதவியாளரும், மரத்தில் இருந்து லாரியில் குதித்தனர். பின்னர் அந்த பகுதியாக வந்த மற்றொரு லாரி மூலம் கீழே இறங்கினர். தலைதெறிக்க, எடுத்தோம் ஓட்டம் என்று லாரியை இயக்கி அங்கிருந்து இருவரும் புறப்பட்டுச் சென்றனர்.