தமிழக-ஆந்திர எல்லைப் பகுதியான மோர்தாணா அணையை ஒட்டி இறந்து கிடக்கும் ஒற்றை யானையின் உடலை அகற்றுவதில் இருமாநில அதிகாரிகளும் அலட்சியம் காட்டுவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
ஆந்திர மாநில வனப் பகுதியிலிருந்து வந்த 7 யானைகள் கூட்டத்திற்கும், ஏற்கெனவே மோர்தாணா பகுதியில் சுற்றித் திரிந்த ஒற்றைக் காட்டு யானைக்கும் மோதல் ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் அந்த ஒற்றை யானை பரிதாபமாக உயிழந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். தற்போது காட்டாறு ஒன்றில் அந்த யானையின் சடலம் கிடக்கிறது. எனவே இதுகுறித்து அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். அதன்பேரில் இருமாநில அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்து, இறந்து கிடந்த யானையின் உடலை பார்த்துச் சென்றுள்ளனர்.
ஆனால் இருமாநில அதிகாரிகளும் பார்த்துச் சென்ற பின்பும் இறந்து கிடக்கும் யானையின் உடலை அப்புறப்படுத்த அதிகாரிகள் யாரும் முன்வரவில்லை என அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். யானையின் உடல் மெல்ல மெல்ல தற்போது அழுகத் தொடங்கியுள்ளது. இதனால் அப்பகுதியில் அதிக தூர்நாற்றம் வீசுகிறது. மேலும் காட்டாறும் மாசடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நோய் பரவும் நிலை ஏற்படும் என அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். எனவே அதிகாரிகள் இவ்விவகாரத்தில் தலையிட்டு யானையின் உடலை அப்புறப்படுத்தி சுகாதாரத்தை காக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.