தமிழ்நாடு

கோவில் நிலம் குத்தகைக்கு விடுவதில் பிரச்னை - மோதிக்கொண்ட இருதரப்பினர்!

கோவில் நிலம் குத்தகைக்கு விடுவதில் பிரச்னை - மோதிக்கொண்ட இருதரப்பினர்!

சங்கீதா

மாரண்டஹள்ளி அருகே கோவில் நிலம் குத்தகை விடுவதில் ஏற்பட்ட பிரச்சனையில், இருதரப்பு மோதிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் திருமால் வாடி அடுத்த பெல்லஹள்ளியை சேர்ந்தவர் முனிராஜ். 37 வயதான இவர், கோவில் பூசாரியாக இருந்து வருகிறார். திருமல்வாடி கிராமத்தில் உள்ள கொல்லி மாரியம்மன் கோவிலுக்குச் சொந்தமான சுமார் 80 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தை ஆண்டுதோறும் அறநிலைத்துறை விவசாயிகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டு வருகிறது. இந்த கோவில் நிலத்தின் தர்மகர்த்தாவாக வீரமணி என்பவர் இருந்து வருகிறார். இதில் பெல்லஹள்ளியில் கோவிலுக்கு சொந்தமான விவசாய நிலங்கள் 12 ஏக்கர் உள்ளது. இந்த நிலத்தில் ஒன்றரை ஏக்கரை கோவில் பூசாரியான இருளர் இனத்தைச் சேர்ந்த முனிராஜ் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்துள்ளார். இந்த நிலம் இந்த ஆண்டு ஏலம் விடப் போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து விவசாய நிலத்தில் ஏற்கனவே பூ உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டிருந்தது. இதனை எவ்வித வருமானமும் இன்றி கோவில் பூசாரியாக இருந்து சம்பளமும் இன்றி தவித்து வந்த முனிராஜ் இந்த நிலத்தை விவசாயம் செய்து தனது வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்தார். இந்நிலையில் அருகாமையில் உள்ள பெல்ரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சின்னபையன் தலைமையில் பத்து பேர் கொண்ட கும்பல் முனிராஜின் குத்தகை கோவில் நிலத்தில் அத்துமீறி நுழைந்து பயிர்களை நாசம் செய்தனர்.

இதனை தட்டிக்கேட்ட முனிராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் பயங்கர ஆயுதங்களால் தாக்கி அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து இடத்தை காலி செய்ய மிரட்டல் விடுத்துள்ளனர் . இதில் உடலில் காயமடைந்த முனிராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து மாரண்டஹள்ளி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.