திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த இருவர் இன்று உயிரிழந்தனர்.
அரியலூர் செந்துறையைச் சேர்ந்த சுந்தரவேல் என்பவர், திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இவருக்கு கடந்த பத்து நாட்களாக காய்ச்சல் இருந்ததாகவும், தாமதமாக அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்றதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சுந்தரவேல் இன்று உயிரிழந்தார்.
இதேபோல, திருச்சி பாலக்கரையைச் சேர்ந்த ராணி என்பவரும், காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரும் இன்று உயிரிழந்தார். இதுகுறித்து திருச்சி அரசு தலைமை மருத்துவமனை முதல்வர் அனிதாவிடம் கேட்டபோது இருவருக்கும் நடத்தப்பட்ட பன்றிக்காய்ச்சல் சோதனையில் இருவருக்கும் பன்றிக்காய்ச்சல் இல்லை என்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாகவும், நிமோனியா காரணமாகவே இருவரும் உயிரிழந்ததாகவும் தெரிவித்தார்.
திருச்சியில் டெங்கு, பன்றிக்காய்ச்சல் உயிரிழப்புகள் இதுவரை இல்லை என்றும் மருத்துவமனை முதல்வர் தெரிவித்துள்ளார். திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் 98 பேர் காய்ச்சலுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.