தமிழ்நாடு

மின்வாரிய நிறுவனங்களில் கணக்கு அறிக்கை தயார் செய்ய இரு குழுக்கள்: மின்சார வாரியம் உத்தரவு

மின்வாரிய நிறுவனங்களில் கணக்கு அறிக்கை தயார் செய்ய இரு குழுக்கள்: மின்சார வாரியம் உத்தரவு

Veeramani

மின்வாரியத்தில் கணக்கு அறிக்கை தயார் செய்ய இரு குழுக்கள் அமைத்து மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு மின்வாரியத்தின் நிறுவனங்களான தமிழ்நாடு மின்வாரிய நிறுவனம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் மற்றும் தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் ஆகியவற்றின் ஆண்டு கணக்கு அறிக்கைகள் அனைத்தும் நிறுவன சட்டத்தின் விதிகளின்படி, 2017-18ம் நிதி ஆண்டு முதல் இந்திய கணக்கு தரநிலை விதிகளின்படி தயாரிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது. மேலும் இதுவரை இவ்வாறு தயாரிக்கப்படாததால் நிதி நிறுவனங்களான ஊரக மின்மயமாக்கல் நிறுவனம் (ஆர்இசி) மற்றும் மின் விசை நிறுவனம் (பிஎப்சி) மூலம் பெறப்படும் கடன்களுக்கு 0.5 சதவீத வட்டி வீதம் உயர்த்தப்பட்டு, ஆண்டொன்றுக்கு ரூ.300 கோடி நஷ்டம் ஏற்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்திய கணக்கு தரநிலை விதிகளின்படி, 2018-19ஆம் ஆண்டு முதலான தணிக்கை செய்யப்பட்ட கணக்கு அறிக்கைகள் மாற்றி அமைக்கப்பட்டு, 2020-21ஆம் ஆண்டுக்கான கணக்கு அறிக்கை தயார் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பை வெளியிட்டார்.

அதை செயல்படுத்தும் வகையில், மின்வாரியத்தில் இயக்குநர், தலைமை நிதிக் கட்டுப்பாட்டாளர், நிதிக் கட்டுப்பாட்டாளர் ஆகிய பதவிகளில் உள்ள அதிகாரிகள் அடங்கிய 10 பேர் கொண்ட குழு அமைத்து உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகத் தலைமை நிதிக் கட்டுப்பாட்டாளர் தலைமையில் இரு ஓய்வு பெற்ற அலுவலர்கள் உள்ளிட்ட 9 பேர் கொண்ட செயலாக்கக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

அறிக்கை தொடர்பான பணிகளை தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் மற்றும் தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகத்தின் தலைவர்கள் வாரந்தோறும் ஆய்வு செய்வார்கள் எனவும், பணிகள் முடிவுறும் வரை இந்தக் குழுக்கள் செயல்படவும் உத்தரவிடப்பட்டுள்ளது.