தமிழ்நாடு

‘விவசாயிகள் வயிற்றில் அடிப்பதா ?’ - குழாய் பதிப்புக்கு தினகரன் கண்டனம்

‘விவசாயிகள் வயிற்றில் அடிப்பதா ?’ - குழாய் பதிப்புக்கு தினகரன் கண்டனம்

webteam

விவசாய நிலங்களை அழித்து எரிவாயு குழாய் பதிக்கிற வேலைகளை மத்திய அரசின் கெயில் நிறுவனம் மேற்கொண்டு வருவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மேலமாத்தூரிலிருந்து நரிமனத்துக்கு கெயில் நிறுவனம் எரிவாயுவை எடுத்துச் செல்ல குழாய் பதிக்க திட்டமிட்டுள்ளது. அதற்காக மேமாத்தூர், செம்பனார்கோவில், காளகஸ்திநாதபுரம், முடிகண்டநல்லூர் ஆகிய கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களின் வழியாக குழாய் பதிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஆனால், இப்பகுதிகளில் விவசாயிகள் குறுவை சாகுபடியைத் தொடங்கியுள்ளனர். பல வயல்களில் குறுவை பயிர்கள் இளம் பயிர்களாக உள்ள நிலையில், கெயில் நிறுவனத்தினர், வயல்களின் நடுவே குழாய்களைப் பதிப்பதால் பயிர்கள் நாசமடைந்துள்ளதாக வருந்துகின்றனர்.

இதற்காக ஏக்கருக்கு ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் இழப்பீடாக தருவதாகக் கூறிய கெயில் நிறுவனம், தற்போது 10 ஆயிரம் ரூபாயை மட்டுமே தருவதாகவும் குற்றம்சாட்டுகின்றனர். விளைநிலங்கள் வழியே குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் செய்த 8 பேர் மீது காவல்துறையினர் நேற்று வழக்குப்பதிவு செய்த நிலையில், இன்றும் போராட்டம் செய்த விவசாயி கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சோறு போடுகிற விவசாயம் ஏற்கனவே நலிவடைந்துள்ளது. இந்நிலையில், அதனை மேலும் அழிக்கும் இத்தகைய வேலைகளைச் செய்வது ஏன்? எனக் கேள்வி எழுப்பியுள்ளார். விவசாயிகளின் வயிற்றில் அடிக்கிற இந்தப் பணியை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், விவசாய நிலங்களை அழித்து எரிவாயு குழாய் பதிக்கிற வேலைகளை மத்திய அரசின் கெயில் நிறுவனம் மேற்கொண்டு வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.