இந்திய தேர்தல் ஆணையத்திடமிருந்து இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக லஞ்சம் கொடுக்க முயன்றதாக டிடிவி தினகரன், இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் உள்ளிட்டோர் மீது டெல்லி குற்றப்பிரிவு காவல்துறை ஏற்கனவே வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. இதில் லஞ்சம் கொடுக்க முயன்றதாக டிடிவி தினகரன், இடைத்தரகர் சந்திரசேகர் உள்ளிட்டோர் மீது டெல்லி குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த 4 ஆம் தேதி வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை, சுகேஷ் சந்திரசேகரிடம் விசாரித்தது. அப்போது, டிடிவி தினகரன் தனக்கு 50 கோடி ரூபாய் கொடுத்ததாகவும் அதில் 25 கோடி ரூபாய் தனக்கு வழங்கியதாகவும் மீதமுள்ள 25 கோடி ரூபாய் கேரள மாநிலத்தில் தன் மனைவியிடம் வழங்கியதாக சுகேஷ் சந்திரசேகர் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் நேற்றைய தினம் ஆஜராகியிருந்த டிடிவி தினகரனிடம் அமலாக்கத்துறையினர் 11 மணி நேரங்களுக்கும் மேலாக விசாரணை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், இந்த வழக்கில் தான் நிரபராதி எனக் கூறினார்.
இந்த விசாரணையின் போது லஞ்சம் கொடுக்கபட்டதற்கு உரிய ஆவணங்கள் இல்லாத போதிலும் சுகேஷ் சந்திரசேகர் கொடுக்கக்கூடிய வாக்குமூலங்களின் அடிப்படையில் கேள்விகள் கேட்க வேண்டாம் என டிடிவி தினகரன் தரப்பு வழக்கறிஞர் கேட்டு கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கிறது. டிடிவி தினகரன் மற்றும் இடைத்தரகர் சுகே சந்திரசேகர் இருவரிடம் தனித்தனி அறையில் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், சுகேஷ் சந்திரசேகர் அளிக்கக்கூடிய வாக்குமூலத்தின் அடிப்படையில் தினகரனிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து நேற்று இரவு டெல்லி சரவணபவன் ஹோட்டலில் இருந்து டிடிவி தினகரன் மற்றும் சுகேஷ் சந்திரசேகர் வரவழைக்கப்பட்டு, அமலாக்கத் துறை தரப்பில் இரவு உணவு அளிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 11 மணி நேரம் டிடிவி தினகரனிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், பின்னர் அவர் அமலாக்கத்துறை அலுவலகத்தில் இருந்து புறப்பட்டார்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் கூறுகையில், “சுகேஷின் மாறுபட்ட வாக்குமூலம் காரணமாக தற்போது விசாரணைக்கு அழைக்கப்பட்டேன். சட்டவிரோத பணபரிவர்த்தனை தொடர்பாக இன்று (நேற்று) தொடர்ச்சியாக நண்பகல் 12.30 மணி தொடங்கி இரவு சுமார் 11 மணிவரை விசாரணை நடைபெற்றது. நான் இந்த விவகாரத்தில் நிரபராதி. மேலும் வரும் காலங்களில் இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு அழைத்தாலும் வருவேன். இந்த விவகாரத்தில் அரசியல் பின்புலம் உள்ளது. அது யார் என்று தனக்கு தெரியவில்லை. சுகேஷ் வேண்டுமென்றே இந்த வழக்கில் என்னை கூறியுள்ளார். அவரின் வாக்கு மூலம் அடிப்படையில் தான் விசாரணைக்கு அழைக்கப்பட்டேன்” என்றார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்கள் தரப்பில் `கால சூழ்நிலை காரணமாக அ.தி.மு.க., பா.ஜ.கவுடன் கூட்டணி வைக்கப்பட்டுள்ளதாக சசிகலா கூறியுள்ளார், அப்படியெனில் பா.ஜ.க தான் அதி.மு.க.வை இயக்குகிறதா?’ என்ற கேட்கப்பட்டபோது, ``தற்போது அரசியல் கேள்விகளுக்கு பதிலளிக்க விரும்பவில்லை” என்றார்.