தமிழ்நாடு

உஷாவை உதைத்த போலீஸின் ஜாமீன் மனு நிராகரிப்பு!

உஷாவை உதைத்த போலீஸின் ஜாமீன் மனு நிராகரிப்பு!

webteam

திருச்சியில் இருசக்கர வாகனத்தில் சென்ற உஷாவை உதைத்த ஆய்வாளர் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

திருச்சி திருவெறும்பூர் பகுதியில் கடந்த 7ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் தம்பதியினரைகாவல் ஆய்வாளர் காமராஜ் உதைத்தார். இதில் உஷா என்ற பெண் படுகாயமடைந்து உயிரிழந்தார். இந்த சம்பவத்திற்கு நீதி கேட்டும், காவல் ஆய்வாளரை கைது செய்ய வலியுறுத்தியும் 3000 க்கும் அதிகமான பொதுமக்கள் அன்றே சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இந்த சம்பவம் தமிழக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து ஆய்வாளர் காமராஜ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

இதுதொடர்பான வழக்கு திருச்சி இரண்டாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கும் படி ஆய்வாளர் காமராஜ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை எதிர்த்து உயிரிழந்த உஷாவின் கணவர் ராஜா மற்றும் திருச்சி வழக்கறிஞர் சங்க தலைவர் பன்னீர்செல்வம் மற்றும் மக்கள் அதிகாரம் சார்பில் சு.ராஜா ஆகியோர் எதிர்மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி லோகேஷ்வரன், ஆய்வாளர் காமராஜின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதையடுத்து காமராஜ் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.