திருச்சியில் காவல்துறையினரால் தாக்கப்பட்ட கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் சிறுகனூர் இந்திரா காலனியைச் சேர்ந்த தம்பதியினர் வின்சென்ட் (43), சோபியா(30). வின்செண்ட் வெளிநாட்டில்
ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர், ஜோதிவேல் (23) என்ற இளைஞருக்கும், சோபியாவுக்கும்
இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் சோபியாவை, ஜோதிவேல் தாக்கியுள்ளார். இது தொடர்பாக சோபியா, அப்போது சிறுகனூர்
காவல் நிலையத்தில் புகார் கொடுக்க, இருதரப்பினரையும் காவலர்கள் சமரசம் செய்து அனுப்பியுள்ளனர்.
இந்நிலையில் வின்செண்ட் வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வந்துள்ளார். தனது மனைவி தாக்கப்பட்டதை மனதில் வைத்திருந்த
வின்செண்ட், அதுபற்றி ஜோதிவேலுவிடம் கேட்டுள்ளார். இருவருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. இதைப்பார்த்த
ஜோதிவேலின் மனைவி, தனது கணவரை வின்செண்ட் தாக்க வந்ததாக சிறுகனூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின்
பேரில் வின்செண்ட் வீட்டிற்கு சென்ற காவலர்கள் அவரை காவல்நிலையத்திற்கு வருமாறு அழைத்துள்ளனர்.
அப்போது “நான் மது அருந்தியிருக்கிறேன். காலையில் விசாரணைக்கு வருகிறேன்” என வின்செண்ட் கூறியுள்ளார். ஆனால் அவரை
காவல்துறையினர் கையைப் பிடித்து, அடித்து இழுத்து செல்ல முயன்றுள்ளனர். அப்போது வின்செண்ட் கையை உதற, அது காவல்
உதவி ஆய்வாளர் செல்வராஜ் மீது பட்டுள்ளது. இதையடுத்து வின்செண்ட் தன்னை தாக்கியாக நினைத்துக்கொண்ட செல்வராஜ், மேலும்
காவலர்களை வரவழைத்துள்ளார். பின்னர் காவல்துறையினர் சேர்ந்து வின்செண்டை அடித்து உதைத்துள்ளனர். இதைப்பார்த்துக்
கொண்டிருந்த அவரது மனைவி சோபியா தடுக்க முயன்றுள்ளார். அவரையும் அடித்து உதைத்த காவலர்கள், அவரது ஆடைகளையும்
கிழித்துள்ளனர்.
இந்த சம்பவத்தை அங்கிருந்த இளைஞர் ஒருவர் தனது செல்போன் கேமராவில் படம் பிடித்துள்ளார். அதைக்கண்ட ஊர்க்காவல்
படையை சேர்ந்த சத்தியமூர்த்தி, செல்போனை பறித்து உடைத்தெறிந்துள்ளார். இதனால் அந்த இளைஞரின் செல்போன் நொறுங்கியது.
தற்போது காயமடைந்த இருவரும் தற்போது திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
(தகவல்கள் : ராஜேஸ் கண்ணன், லால்குடி செய்தியாளர், புதிய தலைமுறை)