திருச்சியில் நகைக்கடையில் துளையிட்டு கொள்ளையடித்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
லலிதா ஜுவல்லரிக்குள் பொம்மை முகமூடி அணிந்து நுழைந்த கொள்ளையர்கள் 13 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை கொள்ளை அடித்துச் சென்றனர். 7 தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இந்தக் கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட நிலையில் விசாரணை மூலம் அது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருநாள்களில் கொள்ளையர்களை கைது செய்து விடுவோம் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்நிலையில், நகைக்கடை கொள்ளை சம்பவம் தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். திருவாரூரில் வாகன தணிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான நபரிடம் போலிசார் சோதனை செய்தனர். அப்போது அவரிடம் இருந்து 2.5 கிலோ தங்கம் சிக்கியது. அந்த தங்கத்தின் பார் குறியீடும், கொள்ளை போன லலிதா ஜூவல்லரி கடையின் நகையும் ஒன்றுதான் என போலீசார் உறுதி செய்தனர்.
இதனையடுத்து அந்த நபரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் மற்ற கொள்ளையர்கள் மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் குறித்தும் புதிய தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.