வீடுவரை உறவு, வீதிவரை மனைவி, காடுவரை பிள்ளை கடைசிவரை யாரோ என்ற கண்ணதாசனின் பாடல் வரிகளை கேட்டு கண்கலங்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஆனால் இடுகாட்டில் வேலைசெய்யும் கணவருக்கு இணையாக ஒரு மூதாட்டி இடுகாட்டில் வேலை செய்கிறார் யார் அவர் விரிவாக பார்க்கலாம்.
திருச்சி கிராப்பட்டியைச் சேர்ந்தவர் மாரியாயி. 2ஆம் வகுப்பு வரை படித்துள்ள இவருக்கு 17 வயதில் திருமணம் நடந்துள்ளது. கணவனை இழந்த இவரின் ஒற்றை மகனும் உதவியாக இல்லாத நிலையில், கணவர் செய்துவந்த மயான வேலையை கடந்த 17 வருடங்களாக செய்து வருகிறார். மயானத்தில் குழி வெட்டுவதை தவிர்த்து அனைத்து வேலைகளையும் அவரே செய்கிறார். பொதுவாக பெண்களை மயானத்தில் அனுமதிப்பதில்லை. ஆனால், அச்சமின்றி இறுதிச் சடங்குகளை செய்வதோடு தகனம் வரை அங்கே நிற்கிறார் மாரியாயி.
மாமனார், கணவர், கொழுந்தனார் வரிசையில், மகன் வந்து மயானத்தில் வேலை செய்ய துணியாத நிலையில், தானே இப்பணிகளை தயக்கமின்றி செய்வதாக கூறுகிறார் மாரியாயி. கொரோனா உச்சத்தில் இருந்த 2 மாதங்களில் மட்டும் தினமும் 20-க்கும் மேற்பட்டோரை அடக்கம் செய்துள்ளார் இவர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த பிறகு, மயான வேலைக்குச் செல்ல வேண்டாமென வீட்டில் உள்ளவர்கள் தடுத்த போதிலும் இடுகாட்டுப் பணியை இறுதி மூச்சுவரை செய்ய வேண்டும் என்று வேலை பார்த்து வருகிறார் இந்த மூதாட்டி. மற்றவர்கள் செய்ய தயங்கும், அஞ்சும் வேலையை, அர்ப்பணிப்போடு செய்யும் மாரியாயி நிஜத்தில் ஒரு பிதாமகள்.