சேலம் மத்திய சிறையில் இரண்டு மணிநேரம் நடைபெற்ற சோதனையில் எந்தவிதமான பொருட்களும் கைப்பற்றப்படவில்லை.
புழல் சிறையில் கைதிகள் சொகுசு வாழ்க்கை தொடர்பான புகைப்படங்கள் வெளியானதை அடுத்து சேலம் மத்திய சிறையில் இன்று திடீர் சோதனை நடத்தப்பட்டது. சேலம் தெற்கு சரக குற்றப்பிரிவு உதவி ஆணையர் சுந்தரமூர்த்தி தலைமையில் இரண்டு ஆய்வாளர்கள் மற்றும் 40 காவலர்கள் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.
இன்று காலை 6 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை 8 மணிக்கு நிறைவடைந்தது. சேலம் மத்திய சிறையை பொறுத்தவரை சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 840 பேர் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே, பலமுறை சேலம் மத்திய சிறையில் கஞ்சா பொட்டலங்கள், கஞ்சா பந்துகள் வெளியிலிருந்து வீசப்படுவதும் அது பறிமுதல் செய்யப்படுவதுமான சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்ந்துள்ளது. இந்நிலையில் இன்று சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
சுமார் இரண்டு மணி நேரம் வரை நடைபெற்ற இந்த சோதனையில் பழைய தட்டுகள் தவிர எந்தவித பொருட்களும் கைப்பற்றப்படவில்லை என்று சேலம் சிறைத்துறை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. என்னதான் ரகசியமாக சோதனை நடத்தப்பட்டாலும், கைதிகளுக்கு முன்கூட்டியே தகவல் கிடைத்துவிடுவதால் சோதனையில் காவல்துறையினருக்கு ஏமாற்றமே ஏற்படுகிறது.