தமிழ்நாடு

ட்விட்டர் இந்தியா ட்ரெண்டிங்கில் 'கோ பேக் ஸ்டாலின்' ஹேஷ்டேக் முதலிடம்

ட்விட்டர் இந்தியா ட்ரெண்டிங்கில் 'கோ பேக் ஸ்டாலின்' ஹேஷ்டேக் முதலிடம்

JustinDurai
கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் கொரோனா தடுப்பு பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ள நிலையில், ட்விட்டரில் இந்திய அளவில் #GoBackStalin என்ற ஹஷ்டேக் முதலிடம் பிடித்துள்ளது. 
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பில் சென்னையை பின்னுக்கு தள்ளி மாநில அளவில் கோவை மாவட்டம் முதலிடம் பெற்று உள்ளது. நாள்தோறும் தொற்று பாதிப்பு 4 ஆயிரத்தை கடக்கிறது. தினசரி 30 பேருக்கு மேல் இறப்பு உள்ளது. கோவைக்கு அடுத்தபடியாக திருப்பூர், ஈரோடு, சேலம், மதுரை, திருச்சி ஆகிய மாவட்டங்களிலும் கொரோனா நோய் தொற்றின் பாதிப்பு நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது. இதையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் பயணம் மேற்கொண்டு கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்து வருகிறார். 
இச்சூழலில், ட்விட்டரில் இந்திய அளவில் #GoBackStalin என்ற ஹேஷ்டேக் முதலிடம் பிடித்துள்ளது. 12 மணி நிலவரப்படி இந்த ஹேஷ்டேகில் ஒரு லட்சத்து 26 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ட்வீட்டுகள் பதிவாகியுள்ளன. 
#GoBackStalin என்ற ஹஷ்டேக்-க்கு அதிருப்தி தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி, ''#GoBackStalin என்று ட்ரெண்ட் செய்யும் அன்பு பாஜக நண்பர்களே, இந்த பெருந்தொற்று காலத்தில் ஒளிந்திருக்கும் பிரதமர் மோடியை வெளியே வரச்சொல்லுங்கள். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொற்றை ஒழிப்பதற்கு களத்தில் நிற்கிறார்'' என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 
பாஜக ஐடி விங் மாநில தலைவர் சி.டி.ஆர் நிர்மல் குமார் தனது ட்விட்டர் பதிவில், ''மு.க.ஸ்டாலின் அரசை கோவை புறக்கணித்துள்ளது. ஸ்டாலின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று கோவை மக்கள் தேசிய அளவில் ட்ரெண்ட்ங்கில் (#GoBackStalin) உள்ளனர். தமிழக முதல்வர் தனது சொந்த மாநிலத்தில் திரும்பிச் செல்லுமாறு கேட்கப்படுகிறார்'' என்று குறிப்பிட்டுள்ளார்.