தமிழ்நாடு

விரும்பும் இடத்திற்கு பணியிட மாற்றம்: ஆசிரியர்களுக்கு அரசு உறுதி

விரும்பும் இடத்திற்கு பணியிட மாற்றம்: ஆசிரியர்களுக்கு அரசு உறுதி

Rasus

பணிக்கு திரும்பும் ஆசிரியர்களுக்கு விரும்பும் இடத்திற்கு பணியிட மாற்றம் வழங்கப்படும்‌ என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கடந்த 22-ம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் அனைவரும் இன்றைக்குள் பணிக்குத் திரும்ப இறுதியாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.  பணிக்குத் திரும்பாத ஆசிரியர்களின் பணியிடங்கள், காலிப்பணியிடங்களாக கருதப்பட்டும் என்றும் முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

ஆனால் தமிழக அரசின் எச்சரிக்கையும் மீறி தமிழகம் முழுவதும் இன்றும் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் போராட்டத்தின் காரணமாக திருப்பூரில் பல்வேறு பள்ளிகளில் ஆசிரியர்கள் வராத காரணத்தால் மாணவ, மாணவிகள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.  நீலகிரி மாவட்டம் கூடலூரில் அரசுப் பள்ளியை பூட்டி விட்டு சாவியை ஆசிரியர்கள் எடுத்துச் சென்றதால் இன்று காலை பள்ளிக்கு வந்த மாணவர்கள் ஒருமணி நேரத்திற்கு மேலாக சாலையில் காத்திருந்தனர். தகவலறிந்து பெற்றோரும் குவிந்தனர். புதுக்கோட்டை மாவட்டத்திலும் ஜாக்டோ ஜியோ போராட்டம் தொடர்வதால் பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் வராததால் 90 சதவிகித பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் உடனடியாக பணிக்குத்திரும்ப பள்ளிக்கல்வித்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. ஆசிரியர்கள் பணிக்குத் திரும்பினால், தாங்கள் விரும்பும் ஊர்களுக்கு பணியிட மாற்றம் பெறலாம் என்றும், இல்லாவிட்டால், அந்த இடம் காலியாக உள்ளதாக அறிவிக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.