தென்மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
அப்படி கடந்த 17ஆம் தேதி ஸ்ரீவைகுண்டம் அடுத்த தாதன்குளம் பகுதியில் கனமழையால் ரயில்வே தண்டவாளம் கண்ணுக்கு தெரியாத அளவுக்கு தண்ணீர் தேங்கியது. மேலும் கடும் வெள்ளப்பெருக்கால் சில இடங்களில் தண்டவாளம் அடித்துச் செல்லப்பட்டதால் ரயில் ஸ்ரீவைகுண்டத்திலேயே நிறுத்தப்பட்டிருந்தது. இதனால் திருச்செந்தூரில் இருந்து சென்னையை நோக்கி புறப்பட்ட செந்தூர் விரைவு ரயில் பாதியில் நிறுத்தப்பட்டது.
இதனால் ரயிலில் இருந்த சுமார் ஆயிரம் பயணிகள் ரயிலில் இருந்து வெளியேறமுடியாமல் தவிக்க நேரிட்டது. சுமார் 200 பயணிகள் முதல்கட்டமாக படகுகள் மூலம் மீட்கப்பட்ட நிலையில், வெள்ளத்தின் கடுமையால் அதன் பிறகு படகுகளை செலுத்தமுடியாத நிலை ஏற்பட்டது. இதனால் ஸ்ரீவைகுண்டம் ரயில்நிலையத்திலே 800 பயணிகள் தங்க வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் சிக்கிக் கொண்ட பயணிகள் அனைவரும் 3 நாட்களுக்குப் பிறகு தேசிய பேரிடர் மீட்புப் படையினரால் பத்திரமாக நேற்றுதான் முழுமையாக மீட்டகப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பயணிகள் இது குறித்து ‘புதிய தலைமுறை’யிடம் நேற்று கூறுகையில், “முதலில் ரயில் நிறுத்தப்பட்ட போது யாரும் சொல்லவில்லை. அதன்பின்பே தண்ணீர் வருகிறது என்ற தகவலை சொன்னார்கள். பேருந்துகளில் வேண்டுமானால் செல்லுங்கள் என 12 மணி போலவே சொன்னார்கள். யாரும் செல்ல முடியவில்லை. அதிகம் தண்ணீர் ஆகி விட்டது” என்றார்.
மற்றொரு பயணி கூறுகையில், “காலையில் எதாவது செய்தி வரும் என காத்திருந்தோம். கிட்டத்தட்ட 2 மணி போல் மீட்புப் படையினர் வருவதாக சொன்னார்கள். ரயில் செல்லாது என்றும் உங்களை அழைத்துச் சென்றுவிடுவோம் என்றும் சொன்னார்கள். அதன்பின் ஏதும் எங்களுக்கு சொல்லவில்லை. நாங்கள் ரயிலிலேயேதான் இருக்கிறோம். எந்த ஒரு செய்தியும் வரவில்லை. விடிந்ததும் டிடிஆரிடம் கேட்டால் அவர்களும் எங்களுக்கு ஏதும் தெரியாது என்றே சொன்னார்கள்” என தெரிவித்தார்.
அதிகாரிகள் தரப்பில் நாம் விசாரித்தபோது, ‘கருங்குளத்தில் மாநில பேரிடர் மீட்புக்குழுவினர், தேசிய தீயணைப்பு மீட்புக்குழுவினர், காவல்துறையினர் உள்ளிட்டோர் முகாமிட்டனர். அதிகாரிகளும் அங்கு விரைந்தனர். மீட்புப்பணிகளுக்கான முயற்சிகளை மேற்கொண்டனர். இருப்பினும் முழுமையாக மக்களை மீட்பதில் சிரமம் நீடித்தது’ என சொல்லப்பட்டது.
இந்நிலையில்தான் இவர்களின் நிலை குறித்து அறிந்த அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள், ரயில் பயணிகளுக்கு உணவு சமைத்து தந்தனர். இதற்கு ரயில் பயணிகள் நெகிழ்ச்சி தெரிவித்தனர். அரசு தரப்பில் ஹெலிகாப்டர் மூலம் அனைவருக்கும் நேற்று காலை உணவு வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
ரயில்பயணிகள் சுமார் 40 மணிநேரம் தவித்த நிலையில் அவர்களை மீட்கச் செய்த முயற்சிகள் பலனளிக்கவில்லை என ரயில்வே காவல்துறை ஆய்வாளர் நம்மிடம் தெரிவித்தார்.
அவர் பேசுகையில், “அதிகாரிகள் அனைவரும் பயணிகளை மீட்க முயற்சித்துக் கொண்டிருந்தனர். அவர்களால் இங்கு வரமுடியவில்லை. அனைவரும் வர முயற்சித்துதான் திரும்பி சென்றோம். யாராலுமே உள்ளே வரமுடியவில்லை. செல்போன் நெட்வொர்க்கூட கிடைக்கவில்லை” என தெரிவித்தார்.
நேற்று மதியத்திற்கு மேல் வெள்ளம் வடியத்தொடங்கிய நிலையில் ரயில் பயணிகள் அனைவரும் வெள்ளூருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கிருந்து பேருந்துகள் மூலமாக நெல்லைக்கு அழைத்துச்செல்லப்பட்டு சொந்த ஊர்களுக்குச் செல்வதற்குரிய போக்குவரத்துக்கு ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொண்டனர். சில பயணிகள் தாங்களாகவே அங்கிருந்து வெளியேறிய சம்பவங்களும் நடந்தன.