ஆசனூர், தாளவாடி மலைப்பகுதியில் கனமழை பெய்துள்ளதை தொடர்ந்து, ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிவருகிறது. இந்த வெள்ளப்பெருக்கால், தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி மழைநீர் ஓடுகிறது. இதனால் மலைகிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ஆசனூர் மற்றும் தாளவாடி மலைப்பகுதி கடல் மட்டத்திலிருந்து சுமார் 1000 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. கடந்த சில நாட்களாக தாளவாடி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் இன்று மாலை ஆசனூர் அடுத்துள்ள மாவள்ளம், கோட்டாடை பகுதிகளில் கனமழை பெய்ததால் வனப்பகுதியில் உள்ள ஓடைகள் மற்றும் பள்ளங்களில் செந்நிற மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
இதேபோல் தாளவாடி அருகே உள்ள நெய்தாளபுரம், சிக்கஹள்ளி பகுதியில் கனமழை பெய்ததால் காட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக தாளவாடியில் இருந்து தலமலை செல்லும் சாலையில் சிக்கஹள்ளி அருகே தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி மழைநீர் ஓடியதால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தரைப்பாலத்தை கடக்க முடியாமல் மலைகிராம மக்கள் தவித்தனர். தொடர்ச்சியாக ஆசனூர் மற்றும் தாளவாடி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருவதால் அப்பகுதியில் கடுமையான குளிர்ச்சி நிலவுகிறது.
- டி.சாம்ராஜ்
தொடர்புடைய செய்தி: கன்னியாகுமரி: மழை வெள்ளத்தில் கூண்டுக்குள் சிக்கிய பறவைகளை உயிருடன் மீட்ட இளைஞர்கள்