தமிழ்நாடு

கேரள அமைச்சரை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க கோரும் தமிழ்ப் பெண்கள்

கேரள அமைச்சரை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க கோரும் தமிழ்ப் பெண்கள்

Rasus

கேரளாவில் தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் தமிழ்ப் பெண்‌கள் தங்களைக் குறித்து கேரள அமைச்சர் எம்.எம்.மணி இழிவாகப் பேசியதாகவும் அவர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

கேரளாவின் மூணாறு பகுதியில் உள்ள தேயிலை தோட்டங்களில் தமிழ்ப் பெண்கள் ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர். இந்த பெண்கள் தொழிலாளர் நலனுக்கான அமைப்பு ஒன்றை ஏற்படுத்தி செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் மூணாறு அருகே கூட்டம் ஒன்றில் பேசிய மணி, பெண்கள் அமைப்பை சேர்ந்தவர்கள் மது அருந்துவதாகவும் சமூகத்துக்கு புறம்பான செயல்களில் ஈடுபடுவதாகவும் பேசினார்.

இவ்வாறு பேசியதற்கு அமைச்சர் மணி மன்னிப்பு கேட்க வேண்டும் என மகளிர் அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். நடிகை மஞ்சுவாரியரும் அமைச்சருக்கு தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார். ஆனால், இவ்விஷயத்தில் தான் மன்னிப்புக் கேட்கப்போவதில்லை என்றும், அவ்வாறு கோர வேண்டும் என்று தனது கட்சி கூறினால், பதவியை ராஜினாமா செய்வேன் என்றும் மணி கூறியதால் சர்ச்சை வெடித்துள்ளது. தான் பெண்களுக்கு எதிராக எந்த வார்த்தையும் பயன்படுத்தவில்லை என்றும், தன்னையும் தனது கட்சியையும் இழிவுபடுத்தும் நோக்கில் சிலர் இத்தகைய செயல்களில் ஈடுபடுவதாகவும் எம்.எம். மணி கூறி இருக்கிறார்

இந்நிலையில் அமைச்சர் எம்.எம்.மணிக்கு எதிர்ப்பு தெரிவித்து மூணாரில் தமிழ் பெண்கள் போராட்டம் நடத்தினர். அப்போது பேசிய தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர் உரிமை அமைப்பின் தலைவர் கோமதி அகஸ்டியன், அமைச்சர் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்க வேண்டும் என வலியுறுத்தினர்.