தமிழ்நாடு

தமிழ்நாட்டில் போதி தர்மருக்கு மிகப்பெரிய சிலை?: சீனாவுடன் உறவை மேம்படுத்த முயற்சி?

தமிழ்நாட்டில் போதி தர்மருக்கு மிகப்பெரிய சிலை?: சீனாவுடன் உறவை மேம்படுத்த முயற்சி?

webteam

போதி தர்மர் வரலாறு மூலம் தமிழ்நாடு- சீனா உறவை மேம்படுத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பிரதமர் நரேந்திர மோடி-சீன அதிபர் ஸி ஜின்பிங் கடந்த மாதம் 11-ஆம் தேதி மாமல்லபுரத்தில் சந்திப்பு நடத்தினர். இந்தச் சந்திப்பின்போது சீன அதிபர் மாமல்லபுரத்தில் உள்ள புராதான சின்னங்களை பார்வையிட்டார். இதனால் சீன சுற்றுலா பயணிகளிடம் தற்போது மாமல்லபுரம் மிகவும் கவர்ந்த சுற்றுலா தலமாக உருவெடுத்துள்ளது. 

இந்நிலையில் காஞ்சிபுரத்தில் ஒரு மிகப் பெரிய போதி தர்மர் சிலையை நிறுவ தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் தமிழ்நாட்டில் புத்த மதம் தொடர்பான சுற்றுலா நகரங்களை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து ‘தி டைம்ஸ் ஆப் இந்தியா’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி நாட்டிலுள்ள மிகப் பெரிய சிலையான சர்தார் வல்லபாய் பட்டேலின் சிலைக்கு அடுத்தப்படியாக மிகவும் உயரமான போதி தர்மர் சிலையை காஞ்சிபுரத்தில் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. 

மேலும் காஞ்சிபுரம், மாமல்லபுரம், நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட 6 நகரங்களை, புத்த மதம் தொடர்பான சுற்றுலா நகரங்களாக உருவமைக்க தமிழ்நாடு அரசு முடிவு எடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக மத்திய சுற்றுலா துறை அமைச்சகத்திடம் நிதியை பெற அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அதேசமயம் சீன தாய்மொழியான மாண்டரின் மொழியில் மாமல்லபுரத்திலுள்ள 10 சுற்றுலா வழிகாட்டிகளுக்கு பயிற்சியளிக்கவும் அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

காஞ்சிபுரத்தில் பல்லவ இளவரசர்களில் ஒருவரான போதி தர்மர், புத்த மதத்தின் சிறப்புகளை பரப்ப சீனா சென்றதாகவும் அப்போது அவர் அங்கு உள்ள சிலருக்கு தற்காப்பு கலையை பயிற்றுவித்தாக வரலாறுகள் தெரிவிக்கிறது. அத்துடன் தமிழ்நாட்டிற்கும் புத்த மதத்திற்குமான தொடர்பு 2000ஆண்டுகள் பழமையானது என்றும் வரலாற்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. 

குறிப்பாக 10ஆம் நூற்றாண்டில் சோழ மன்னன் ராஜராஜ சோழன் புத்த மதத்தின் விஹாரமான ‘சூடாமணி’யை கட்ட நாகப்பட்டனம் மாவட்டத்தில் இடம் கொடுத்ததாக வரலாறுகள் தெரிவிக்கின்றன. மேலும் நாகபட்டினத்திலிருந்து புத்த மதம் தொடர்பான 100 வெண்கல சிலைகள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் சிலர் தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது.