சங்கரய்யா pt web
தமிழ்நாடு

“ஆளுநருக்கு உண்மையாகவே அக்கறை இருக்குமானால் கையெழுத்திடட்டும்” - செக் வைக்கும் அமைச்சர் பொன்முடி

தமிழக சுதந்திர போராட்ட வீரர்கள் மீது ஆளுநருக்கு அக்கறை இருக்குமானால் சங்கரய்யாவிற்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்குவதற்கான கோப்பில் கையெழுத்திடுவார் என அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

Angeshwar G

மருது சகோதரர்களின் நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, “சுதந்திரப் போராட்ட தியாகிகள் எந்த சமூகத்தில் இருந்து வந்தார்கள் என்பதிலிருந்து அவர்களை சாதி தலைவர்களாக அடையாளப்படுத்தி, மக்களையும் ஒன்றுபடவிடாமல் தடுக்கிறார்கள். மகாத்மா காந்தி, பகத்சிங், வல்லபாய் பட்டேல், சுபாஷ் சந்திரபோஸ் உள்ளிட்டோர் தமிழ்நாட்டில் பிறந்திருந்தால் அவர்களையும் சாதி தலைவர்களாக மாற்றி இருப்பார்கள்.

ஆளுநர் ஆர்.என்.ரவி

ராபர்ட் கால்டுவெல்தான் திராவிட கருத்தியலை உருவாக்கியவர். பள்ளிப் படிப்பை பாதியில் விட்ட ராபர்ட் கால்டுவெல்லை இந்தியாவிற்கு அனுப்பினார்கள். அவர்தான் திராவிடம் என்று பிரித்துக் கூறினார். இந்தியாவிற்கு சுதந்திரம் வேண்டாம் என்றவர்களை தமிழ்நாட்டில் கொண்டாடுகிறார்கள். சுதந்திரப் போராட்ட தியாகிகளை கொண்டாடுவதில்லை” என தெரிவித்திருந்தார். இதற்கு பல்வேறு மட்டத்தில் இருந்தும் எதிர்ப்புகள் எழுந்தன. திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு ஆளுநரின் பேச்சைக் கண்டித்து காட்டமான அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார்.

முன்னதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் ஆளுநரின் பேச்சிற்கு கண்டனம் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், “திமுக அரசு அமையும்போதெல்லாம் விடுதலை வீரர்களின் புகழ் திக்கெட்டும் போற்றப்படும். நஞ்சு தோய்ந்த எண்ணங்களோடு நயமாகப் பேசும் திடீர் குபீர் நாட்டுப்பற்றாளர்களின் வரலாற்றைத் தேசத் தந்தை காந்தியாரின் இறுதி நாட்கள் சொல்லும். முதலமைச்சர் பதிவிட்டுள்ளார். இது போன்ற கோட்சே கூட்டத்தைதான் மகாகவி பாராதியார் நடிப்புச் சுதேசிகள் என பாடினார்” என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பொன்முடி, “தமிழகத்தில் சுதந்திர போராட்ட வீரர்களை நாம் நினைவு கூற தவறியதாக ஆளுநர் தமிழக சுதந்திர போராட்ட வரலாறையே தெரிந்தவர் போல் கருத்து கூறியதற்கு டி.ஆர்.பாலு பதிலளித்துள்ளார்.சங்கரைய்யா கல்லூரிப் படிப்பை தியாகம் செய்திவிட்டு சுதந்திர போராட்டத்தில் கலந்துகொண்டு ஐந்து ஆண்டுகள் சிறையில் இருந்தவர். மீண்டும் மக்களுக்காக போராடி 4 ஆண்டுகள் சிறையில் இருந்தவர். சுதந்திர போராட்ட காலத்தில் 2 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர்.

அப்படியெல்லாம் பாடுபட்ட அவர் சுதந்திர வீரர் என்பதன் அடிப்படையில் அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க வேண்டும் என்று மதுரை பல்கலைக்கழகத்தின் ஆளவை மன்றமும், ஆட்சி மன்ற குழுவின் உத்தரவைக்கூட ஆளுநர் ஏற்றுக்கொள்ளாமல் பேசி இருப்பதை பார்த்தாலே புரிந்துகொள்ள முடியும். அவருக்கு தமிழக சுதந்திர போராட்ட வீரர்கள் மீது அக்கறை இருக்குமானால் சங்கரைய்யாவிற்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க கையெழுத்திடுவார் என நம்புகிறேன். உங்கள் மூலமாக கோரிக்கையையும் விடுக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.