இடைத்தேர்தலில் ஆதரவு அளிக்குமாறு பொன்.ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து அமைச்சர் ஜெயக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை தமிழக அமைச்சர் ஜெயக்குமார் நேரில் சந்தித்துள்ளார். சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது. நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு அளிக்குமாறு அப்போது பொன்.ராதாகிருஷ்ணனிடன் அமைச்சர் ஜெயக்குமார் கோரிக்கைவிடுத்தார். அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பாஜக தலைவர்கள் தேர்தல் பரப்புரையில் ஈடுபட வேண்டும் எனவும் அவர் கோரினார்.
இரண்டு நாட்களுக்கு முன்பாக தமிழகத்திற்கான பாஜக மேலிட பொறுப்பாளர் முரளிதரராவை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து இடைத்தேர்தலுக்கு ஆதரவு கோரியிருந்தார். அதேபோல், ஐஐடி நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடியிடம் முதல்வர் பழனிசாமியும் ஆதரவு கோரியிருந்தார்.
முன்னதாக, வேலூர் இடைத்தேர்தலில் பாஜக தலைவர்கள் யாரும் பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை. பாஜக உடன் கூட்டணி அமைத்ததால்தான் மக்களவைத் தேர்தலில் படுதோல்வி அடைந்ததாக கருதியே அதிமுக பாஜகவை புறக்கணித்ததாக கூறப்பட்டது. நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அறிவிப்புகள் வெளியான பின்னரும் கூட இருகட்சிகளும் ஒரே கூட்டணியில்தான் இருக்கின்றனவா?., பாஜக அதிமுகவிற்கு ஆதரவு அளிக்குமாறு அல்லது தனித்து வேட்பாளரை நிறுத்துமா என்ற அளவிற்கு பேசப்பட்டது. இத்தகைய நிலையில்தான் அதிமுக தலைவர்கள் தொடர்ச்சியாக பாஜக தலைவர்களை நேரில் சந்தித்து ஆதரவு கோரிவருகின்றனர். அக்டோபர் 21ம் தேதி இரண்டு தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.