தமிழ்நாட்டில் மாவட்ட ஆட்சியர்களின் பதவிக்காலம் குறித்து தமிழ்நாடு ஐஏஎஸ் அதிகாரிகளின் சங்கம் கவலை தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு ஐஏஎஸ் அதிகாரிகளின் சங்கம் ‘ஐஏஎஸ் இன் தமிழ்நாடு- தற்போதைய அறிக்கை’ என்ற ஒன்றை தயாரித்துள்ளது. இந்த அறிக்கையின் மூலம் தமிழ்நாடு அரசுக்கு 6 பரிந்துரைகளை இச்சங்கம் முன் வைத்துள்ளது. அத்துடன் இந்த அறிக்கையில் தற்போது நிலவும் நிலை குறித்து அதிருப்தியை பதிவு செய்துள்ளது.
குறிப்பாக ஐஏஎஸ் அதிகாரிகள் தற்போது மாவட்ட ஆட்சித் தலைவர்களாக அதிக காலம் பணியில் உள்ளனர். இதனால் மற்ற இளம் அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர்கள் ஆகும் வாய்ப்பு கிடைப்பதில்லை. இதனால் இளம் ஐஏஎஸ் அதிகாரிகள் தங்களின் மன உறுதியை இழக்க நேரிடுகிறது.
ஆகவே ஐஏஎஸ் அதிகாரிகளின் இந்த அறிக்கையில் ஒரு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதாவது மாவட்ட ஆட்சியர் ஆவதற்கு 7 முதல் 8 ஆண்டுகள் பணி அனுபவம் இருந்தால் போதுமானது. அத்துடன் அவர்கள் 2 அல்லது 3ஆண்டுகள் மட்டும்தான் மாவட்ட ஆட்சியர் பதிவியில் இருக்கவேண்டும் எனப் பரிந்துரைத்துள்ளது.
மேலும் இந்த அறிக்கையில் தமிழ்நாட்டில் டி.என்.ஹரிஹரன் 8 ஆண்டுகள், கே.எஸ் பழனிச்சாமி 7 ஆண்டுகள், வீரராகாவ ராவ் 6 ஆண்டுகள் மற்றும் எல்.சுப்பிரமணியன் 5 ஆண்டுகள் மாவட்ட ஆட்சியர்களாக இதுவரை பணியாற்றியுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைபோல அதிக ஆண்டுகள் மாவட்ட ஆட்சியராக பணியில் இவர்கள் தொடர்வதால் அது மற்ற ஐஏஎஸ் அதிகாரிகளின் வாய்ப்பை குறைப்பது மட்டுமல்லாமல் அவர்களின் மன உறுதியையும் குன்றச் செய்கிறது.
அதேபோல, தமிழ்நாட்டில் தற்போது இருக்கும் ஐஏஎஸ் அதிகாரிகளின் எண்ணிக்கையை உயர்த்தாமல் காலிப்பணியிடங்களை நிரப்ப முடியும் என இந்த அறிக்கை தெரிவிக்கிறது. உதாரணமாக துணை ஆட்சியர்(வளர்ச்சி) பதவியில் 20 இடங்கள் உள்ளன. ஆனல் அதில் தற்போது 10 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளது.