தமிழ்நாடு

7 பேர் விடுதலை : ஆளுநருக்கு கடிதம் எழுத‌‌ தமிழக அரசு முடிவு?

7 பேர் விடுதலை : ஆளுநருக்கு கடிதம் எழுத‌‌ தமிழக அரசு முடிவு?

webteam

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அரசு விரைவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திற்கு கடிதம் எழுத
உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீபாவளி விடுமுறை முடிந்த உடன் தமிழக அரசின் உள்துறைசெயலாளர் நிரஞ்சன் மார்டி, 7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநரின்
கூடுதல் தலைமை செயலாளர் ராஜகோபாலுக்கு கடிதம் எழுதுவார் என சொல்லப்படுகிறது. பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில்
சிறையில் இருக்கும் பேரறிவாளன், முருகன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து, அரசமைப்பு சட்டம் 161வது பிரிவின் படி ஆளுநரே
முடிவெடுக்கலாம் என கடந்த செப்டம்பர் மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

உடனடியாக தமிழக அமைச்சரவை கூடி, 7 பேரையும் விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரை செய்து தீர்மானம் நிறைவேற்றியது.
இதுவரை அரசு அளித்த பரிந்துரை மீது ஆளுநர் எந்த முடிவும் எடுக்காத நிலையில், ஆளுநருக்கு தமிழக அரசு கடிதம் எழுத
திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 7 பேர் விடுதலை தொடர்பான அரசின் பரிந்துரை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி,
இந்த கடிதம் அனுப்பப்படும் என தெரிகிறது. 

இதனிடையே 7 பேர் விடுதலை தொடர்பாக 2014ஆம் ஆண்டு தமிழக அரசு எடுத்த முடிவுக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில்
நிலுவையில் உள்ளதால் ஆளுநர் இது குறித்து முடிவெடுக்காமல் இருப்பதாக கூறப்படுகிறது.