ஆங்கில நாளிதழொன்றுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அளித்துள்ள பேட்டியொன்று, இன்று பிரசுரமாகி உள்ளது. அதில் அவர் திராவிட மாடல் ஆட்சி குறித்து கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அவர் பேசிய பல கருத்துகளின், முக்கிய சாராம்சங்களை இங்கு காண்போம்.
“* முதல்வர் ஸ்டாலின் மீது எனக்கு மதிப்பும் மரியாதையும் உள்ளது. அவர் சிறந்த மனிதர்.
* காலாவதியான கொள்கைகளைக் கொண்டு ‘திராவிட மாடல்’ என்ற அரசியல் வார்த்தைகளை பயன்படுத்தி, ஆட்சி நடத்துகிறது அரசு. இந்தக் கொள்கைகள் ‘ஒரே நாடு, ஒரே பாரதம்’ கொள்கைக்கு எதிரானது.
* ஆளுநர் மாளிகையின் செலவு குறித்து அண்மையில் சட்டமன்றத்தில் நிதிஅமைச்சர் பிடிஆர் குறிப்பிட்டவை, உண்மைக்குப் புறம்பான தகவல்கள்.
* தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பிய சித்த மருத்துவ பல்கலைக்கழக சட்ட மசோதா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவர்கள் இரண்டு முறை அனுப்பிய அந்த மசோதாவில், சித்த மருத்துவ பல்கலைக்கழகத்தின் வேந்தராக முதலமைச்சர் இருப்பார் என்று சொல்லப்பட்டுள்ளது. இதனால்தான் இந்த மசோதா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா பல்கலைக்கழக மானியக் குழு விதிகளுக்கு எதிராக உள்ளதால், நிலுவையில் உள்ளது.
* சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட 8 உயர் கல்வித்துறை சார்ந்த சட்ட மசோதாக்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் அம்மசோதாக்கள் மூலம், பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசு எடுத்துக் கொள்கிறது. இப்படியான சட்ட மசோதாவை ஏற்றுக் கொள்ள முடியாது.
‘பல்கலைக்கழகங்களில் அரசியல் இருக்கக் கூடாது என்பதற்காக, ஆளுநர்கள் மூலம் துணை வேந்தர்கள் நியமனம் செய்யப்படுவர்’ - என்பதே பல்கலைக்கழக மானியக் குழு சட்டத்தில் இருக்கிறது.
* இதுவரை 48 சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கி உள்ளோம். 3 மசோதாக்கள் குடியரசுத் தலைவரின் பரிசீலனையில் இருக்கிறது.
* இந்த ஆண்டு ஜனவரி மாதம் நிறைவேற்றி அனுப்பப்பட்ட ஏழு சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
* தமிழ்நாட்டில் இருந்து யுபிஎஸ்சி நடத்தும் குடிமைப் பணி தேர்வுகளுக்கு தேர்வு செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது. 1950, 60, 70 ஆகிய காலகட்டங்களில் தமிழ்நாட்டில் கல்வியின் தரம் நன்றாக இருந்தது. நாட்டிலேயே முதல் 10 இடங்களில் இருந்த சென்னை பல்கலைக்கழகம், தற்போது நூறாவது இடத்தில் இருக்கிறது.
* கடந்த ஜனவரி மாதம், ஆளுநர் உரையின்போது நான் சட்டப் பேரவையில் இருந்து வெளிநடைப்பு செய்தேன். அதற்கு காரணம், எனக்கு தரப்பட்ட கவர்னர் உரையில், ‘தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு நன்றாக உள்ளது. அமைதி மாநிலமாக இருக்கிறது’ என எழுதப்பட்டிருந்தது. அதை நான் படிக்கவில்லை. ஏனென்று சொன்னால் அச்சமயத்தில் கள்ளக்குறிச்சி பள்ளிக்கலவரம், கோயம்புத்தூர் கோயில் அருகே நடைபெற்ற குண்டுவெடிப்பு உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் நடந்திருந்தன. அவை சட்டம் ஒழுங்கு சரியில்லை என்பதை காட்டின. இதனால் நான் அந்த உரையை வாசிக்கவில்லை. இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது. ஆகவே நான் வெளியேறிவிட்டேன்”